பக்கம் எண் :

சீறாப்புராணம்

1026


இரண்டாம் பாகம்
 

      (இ-ள்) அவ்விதம் வந்து சேர்ந்த சிறுவன் நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் மலையை நிகர்த்த தோள்களையும் பிரகாசத்தினது வடிவத்தையும் மேலாக ஓங்கி நீட்சி யுற்ற அழகிய கைகளையும் நீங்காத ஒளிவை யுடைய சந்திரனைப் போன்ற வதனத்தையும் பார்த்துத் தனது  மனத்தினகம் சந்தோட மடைந்து துன்பத்தினது குற்றமான தறும் வண்ணம் இரு கண்களையும் கைகளையும் அவர்களின் வாசனையைக் கொண்ட மெல்லிய இரு சரணங்களிற் பொருத்தி கண்ணின் நீரானது ஒழுகும்படி பணிந்து நின்றான்.

 

2771. பதத்தினது லிறைஞ்சித் தாழ்ந்து பணிந்துவாய் புதைத்துப் போற்றி

     யிதத்தொடும் சாலமுங் கூறி யினிதுனின் றவனை நோக்கி

     யுதித்தெழும் பரிதி யேய்ப்பா னுரைக்கரும் வடிவ னியாவன்

     மதித்துரை யெனஅம் மாறு முகம்மதுக் கெதிர்ந்து சொல்வார்.

4

      (இ-ள்) பாதங்களில் அவ்வாறு குனிந்து தாழ்ந்து பணிந்து வாயைப் பொத்தித் துதித்து இனிமையுடன் ழுஅஸ்ஸலாமு அலைக்குழு மென்று சலாமுஞ் சொல்லி இன்பத் தோடும் நின்ற அச் சிறுவனை அவர்கள் பார்த்துச் சமுத்திரத்தின்கண் தோற்றமா யெழாநிற்கும் சூரியனை நிகர்த்தவ னாகிய சொல்லுதற் கரிய வடிவை யுடைய இவன் யாவன்? அதை யுணர்ந்து கூறு மென்று கேட்க, அதற்கு அந்த அம்மா றென்பவர் நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களுக்கு எதிர்த்துச் சொல்லுவார்கள்.

 

2772. அடிமையிற் சிறியேன் வாழு மகத்தினி லிருந்து நுந்தங்

     கடிமலர்ப் பதத்தைப் போற்றிக் கட்டுரைக் கலிமா வாழ்த்தி

     நெடியவன் மறைநே ரின்சொ னிகழ்த்தினன் செவியிற் கேட்டுச்

     சடுதியி னென்முன் றோன்றி விருப்பொடு சலாமுஞ் சொன்னார்.

5

      (இ-ள்) அடியார்களிற் சிறியே னாகிய யான் வாசஞ் செய்யும் வீட்டினிடத் துறைந்து உங்களது வாசனையைக் கொண்ட தாமரைப் புட்பத்தை நிகர்த்த திருவடிகளைத் துதித்துச் சத்திய வசனமாகிய ழுலாயிலாஹ இல்லல்லாகு முகம்மதுர்ற சூலுல்லாஹிழு யென்னுங் கலிமாவைப் புகன்று புகழ்ந்து நெடியவனான ஹக்கு சுபுகானகு வத்த ஆலாவின் புறுக்கானுல் அலீ மென்னும் வேதத்தினது உண்மையை யுடைய இனிய வசனங்களை ஓதினேன். அவற்றை இவர் காதுகளினாற் கேள்வியுற்று விரைவாக எனது முன்னர் வந்து ஆசையோடும் ழுஅஸ்ஸாமு அலைக்குழு மென்று சொல்லினார்.