பக்கம் எண் :

சீறாப்புராணம்

1122


இரண்டாம் பாகம்
 

பாத்திமா திருமணப் படலம்

 

அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்

 

3041. திங்கள்வந் திரைஞ்சிப் போற்றி செய்தெதிர் பேசப் பேசு

     மங்குலங் கவிகை வள்ளல் வளம்பெறு மதீனாத் தன்னிற்

     பொங்குதீன் விளங்க நாளுங் காரணப் புதுமை யோங்கி

     யெங்கணும் படரச் செங்கோ னெறியர சியற்று நாளில்.

1

      (இ-ள்) சந்திரனானது வந்து பணிந்து துதித்து எதிராகப் பேசப் பதில் பேசிய மேகக் குடையை யுடைய வள்ளலான நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி காத்திமுல் அன்பியா முகம்மது முஜ்தபா அஹ்மது முஸ்தபா ஹபீபு றப்பில் ஆலமீன் றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் செல்வத்தைப் பெற்ற திரு மதீனமா நகரத்தின்கண் ஓங்கா நிற்கும் தீனுல் இஸ்லாமென்னும் மெய்ம் மார்க்கமானது விளங்கும் வண்ணம் பிரதி தினமும் காரணத்தைக் கொண்ட அற்புதங்க ளானவை அதிகரித்து எவ்விடத்தும் பரவும்படிச் செங்கோலினது ஒழுங்கை யுடைய அரசாட்சி செய்யுகின்ற காலத்தில்.

 

3042. விதியவன் மொழிம றாது விண்ணவர்க் கரசர் கூறும்

     புதுமறை யவர்கள் போற்றப் பொருவில்வா னவர்கள் வாழ்த்தக்

     கதுவகிற் கரிய கூந்தற் காரிகை பாத்தி மாதம்

     வதுவையின் வரலா றெல்லாம் வகுத்தினி துரைக்க லுற்றாம்.

2

      (இ-ள்) விதியவனான அல்லாகு சுபுகானகு வத்த ஆலாவின் வார்த்தை யானது மாறாமல் தேவர்க ளாகிய மலாயிக்கத்து மார்களுக்கு அதிபதி யாகிய ஜிபுரீ லலைகிஸ்ஸலா மவர்கள் கூறிய அற்புதத்தைக் கொண்ட புறுக்கானுல் அலீமென்னும் வேதத்தை யுடையவர்களான அசுஹாபிமார்கள் துதிக்கவும், ஒப்பற்ற அமரர்கள் வாழ்த்தவும், வெடிப்பாக வகிர்கின்ற கருநிறத்தைக் கொண்ட கூந்தலையுடைய காரிகையரான காத்தூனே ஜன்னத் பீவி பாத்திமா றலி யல்லாகு அன்ஹா அவர்களின் விவாகத்தினது வரலா றெல்லாவற்றையும் பிரித்து இனிமையோடும் யாம் கூறுவாம்.

 

3043. ஆதிநா யகன்றன் றூதர்க் கன்புறுங் கதீசா வீன்ற

     பேதையர் நால்வர் தம்முட் பெற்றபே றனைத்து மொன்றாய்க்

     கோதறத் திரண்டு சோதிக் கொடியென வுருக்கொண் டோங்கி

     மாதர்க டிலத மென்ன மானிலத் துதித்த பாவை.

3