பக்கம் எண் :

சீறாப்புராணம்

1455


இரண்டாம் பாகம்
 

4008. உன்னும் வஞ்சகன் கலபருண் மகனுபை யென்னு

     மன்ன னீதெலா முணர்ந்தனன் றுணுக்குற்று மயங்கிக்

     கன்ன மீதுகை வைத்தனன் கலங்கினன் முகம்ம

     தின்ன மேயிருக் கின்றன னோவென வெண்ணி.

249

     (இ-ள்) அவ்வாறு நெருங்கக் கருதுகின்ற வஞ்சகத்தையுடையவனான கலபென்பவன் பெற்ற புதல்வனாகிய உபையென்று சொல்லும் அரசனானவன் இஃதனைத்தையுந் தெரிந்து துணுக்குற்று அறிவழிந்து அந்த முகம்மதெனபவன் இன்னும் இறக்காம லிருக்கின்றானோ? என்று சிந்தித்துக் கைகளைக் கன்னத்தின்கண் வைத்துத் துயரப்பட்டான்.

 

4009. மறந்த தும்பிய முகம்மது சமயவெவ் வலியோ

     டிறந்து போயின னென்றிவ ணிருந்தன னின்னே

     பிறந்த தோர்மொழி யென்றுகண் சிவந்துகை பிசைந்து

     சிறந்த வேலெடுத் தார்த்தனன் புழுங்கினன் சினந்தான்.

250

     (இ-ள்) அவ்வாறு துயரப்பட்டுக் கேடுகள் நிறைந்த அந்த முகம்மதென்பவன் அவனது மார்க்கமாகிய வெவ்விய வல்லமையோடும் மாண்டு போனானென்று யானிங்குச் சிந்தித்திருந்தேன். இப்பொழுது அவன் மாளவில்லையென்று ஓர் வார்த்தையான துண்டாயிற் றென்று சொல்லி இருவிழிகளும் செந்நிற மடையப் பெற்றுக் கைகளைப் பிசைந்து மேன்மைப் பட்ட தனது வேலாயுதத்தை எடுத்துக் கொண்டு பெரிய முழக்க மிட்டுப் புழுங்கிக் கோபித்தான்.

 

4010. கட்டு வாய்மையின் முகம்மது தனைகயாத் துடனே

     விட்டுப் போவதற் கெளியனோ வெனமனம் வெகுண்டு

     மட்டி லாதபல் பாசைகள் கூறிவெவ் வாசி

     யெட்டி யேறின னடத்தினன் பணிபயந் திரங்க

251

     (இ-ள்) அன்றியும், பொய்யான வார்த்தைகளை யுடைய அந்த முகம்மதென்பவனை உயிரோடும் விட்டு விட்டுச் செல்லுவதற்கு யான் எளியேனா? அல்லேனென்று இதயமானது கோபிக்கப் பெற்று அளவற்ற அனேக சபதவார்த்தைகளைப் பேசி வெவ்விய குதிரையில் தாவி ஏறி ஆதிசேடனும் அஞ்சிப் பரிதவிக்கும் வண்ணம் அஃதை நடத்தினான்.

 

4011. பண்டு தோன்றிய முகம்மது பரியினி லேறி

     வண்டு றுக்கிமேல் வருபவன் றனையெதிர் மறியா

     தெண்டி சையினும் புகழ்தர விடுமின்க ளென்ன

     விண்டு நின்றன ரவனுமாங் குற்றனன் விரைவின்.

252