இரண்டாம் பாகம்
சுகுறாப் படலம்
கலிவிருத்தம்
4123.
பொன்றின னெனத்தம துடற்புள கெறிந்து
நன்றுவகை கொண்டுள நயந்தினிய தூதர்
சென்றுசுகு றாவினை வளைந்துசிறை கொண்டு
வென்றிகொ டெழுந்துவர வேண்டுமினி யென்றார்.
1
(இ-ள்) மேன்மையான
றசூலாகிய நமது நாயகம் நபிகட் பெருமானார் செய்யிதுல் முறுசலீன் ஹபீபுறப்பில் ஆலமீன் காத்திமுல்
அன்பியா முகம்மது முஸ்தபா சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் அந்தக் ககுபென்பவன் அவ்வாறு மாண்டா
னென்று தங்களது சரீரமானது மகிழ்ச்சி யடையப் பெற்று மனதின் கண் நல்ல சந்தோஷத்தைக் கொண்டு
இனி விரும்பிப் போய்ச் சுகுறாவென்னும் நகரத்தைச் சூழ்ந்து வெற்றி கொண்டு அங்குள்ள ஜனங்களை
அடிமைப் படுத்தி அவ்விடத்தை விட்டுமெழும்பி வரவேண்டுமென்று சொன்னார்கள்.
4124.
மாற்றமது கேட்டுமற மள்ளர்க ளெழுந்தார்
வேற்றுவமை சொல்லரிய வேதருமெ ழுந்தா
ரேற்றமர் வயப்புரவி யெண்ணில திரண்டு
நாற்றிசை தொறுந்துகள் பரந்திட நடந்த.
2
(இ-ள்) அந்தச் சமாச்சாரத்தைக்
கேள்வியுற்றுக் கோபத்தைக் கொண்ட வீரர்களான சஹாபாக்க ளெழும்பினார்கள். வேறு ஒப்புச்
சொல்லுதற் கருமையான புறுக்கானுல் மஜீதென்னும் வேதத்தையுடைய நமது நாயகம் நபிகட் பெருமானார்
நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களு மெழும்பினார்கள். மேன்மையைக்
கொண்ட யுத்தத்திற்குரிய வெற்றியை யுடைய கணக்கற்ற குதிரைகள் ஒன்றோடொன்று சேர்ந்து நான்கு
திக்குகளிலுந் தூசியானது படரும் வண்ணம் நடந்தன.
4125.
விரிதிரை யெனத்தொகுதி வெண்மரை யிரட்டக்
கருமுகி லுறக்கதலி கைத்திர ணுடங்க
விருளறு மதிக்கவிகை யெங்கணு மிலங்கத்
தரைதொறு மிருண்டென நிழற்குவை தழைத்த.
3
|