இரண்டாம் பாகம்
சாபிர் கடன் றீர்த்த படலம்
அறுசீர்க்கழிநெடிலடி
யாசிரிய விருத்தம்.
4285.
அனையவர் போய பின்ன ராசவத் தொடையல் வேய்ந்த
பனிவரை யனைய தோளார் பகைதடிந் திலங்கு வேலார்
தனிமழ வரியே றன்னார் சாபிறென் றோதுந் தக்கோர்
நனிபுகழ் தழுவி நின்ற நபிமுனம் வந்து சொல்வார்.
1
(இ-ள்) அத்தன்மையான
அவர்கள் அவ்வாறு அவ்விடத்தை விட்டுஞ் சென்ற பிற்பாடு மதுவைக் கொண்ட மாலையைத் தரித்த
இமயமலையை நிகர்த்த தோள்களை யுடையவர்களும், விரோதத்தைக் குறைத்துப் பிரகாசியா நிற்கும்
வேலாயுதத்தை யுடையவர்களும், ஒப்பற்ற இளம் பருவத்தைப் பொருந்தி ஆண் சிங்கத்தைப் போன்றவர்களுமான
சாபிறு றலியல்லாகு அன்கு என்று சொல்லு மறிஞ ரவர்கள் மிகுத்த கீர்த்தியை ஏற்று நின்ற நமது நாயகம்
எம்மறைக்குந் தாயகம் நபிகட் பெருமானார் செய்யிதுனா செய்யிதுல் முறுசலீன் ஷபீகுல் முதுனபீன்
அஹ்மது முஜ்தபா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களது சந்நிதானத்தில் வந்து
சொல்லுவார்கள்.
4286.
அண்டர்நா யகவென் றந்தை யறிவிலா யெகூதி யோர்பாற்
பண்டைநா ளினிய வீந்தின் பழமறு பஃது கோட்டை
கொண்டனர் பலிசை யாக வாங்கவை கொடுக்கு முன்னம்
விண்டன ருயிரை யைய மேலவன் விதியின் வண்ணம்.
2
(இ-ள்) தேவர்களான
மலாயிக்கத்துமார்களுக்கு அதிபதியானவர்களே! எங்களுக்குக் குருவானவர்களே! எனது பிதாவானவர் புத்தியில்லாத
எகூதிக ளிடத்தில் ஆதிகாலத்தில் இனிமையைக் கொண்ட அறுபது கோட்டை ஈத்தங் கனியைப் பலிசைக்குக்
கடனாக வாங்கினார்கள். அவ்வாறு வாங்கிய அதை மீண்டுங் கொடுப்பதற்கு முன்னர் யாவற்றிற்கும்
மேலானவனான ஹக்குசுபுகானகுவத்த ஆலாவின் கற்பனைப்படி உயிரை விட்டு மவுத்தானார்.
4287.
என்னுழை யவர்க ளீண்டிப் பொலிகட னீகென் றுன்னிப்
பன்னினர் முதல்கொண் மியாவென் றடியனேன் பகர முன்னஞ்
சொன்னசொற் படிநல் கென்னத் தடுத்தனர் துணிந்து நின்றார்
மன்னவிவ் வருட மெற்கு வருபலன் சிறிது மன்னோ.
3
|