இரண்டாம் பாகம்
(இ-ள்) புண்ணியத்தைத்
திரட்டி வேறாக ஒப்பற்ற ஓராண் வடிவத்தைச் செய்ததென்று சொல்லுந் தன்மையையுடையவர்களும் யாவற்றிற்கு
முதன்மையனான ஜல்லஜலாலகு வத்த ஆலாவின் றசூலுமாகிய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி ஹாமிது
அஹ்மது முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் தங்கள் பிராணனைப் போலும் மேன்மைப்பட்ட
தோழர்களான அசுஹாபிமார்கள் இருபக்கத்திலும் வளைந்து வரும் வண்ணம் அந்தச் சாபிறு றலியல்லாகு
அன்கு அவர்களது புள்ளிகளையு மிரேகைகளையு முடைய தேனீக்கள் தங்கள் மூக்கினாற் கிளர, அதனால்
மதுவையுடைய பூங்கொத்துக்களிலிருந் துண்டான மகரந்தங்கள் செறிந்த வாசனை பொருந்திய அழகிய ஈத்தஞ்
சோலையிற் போய்ச் சேர்ந்தார்கள்.
4291.
அடல்புரி சாபிர் தம்மை யருகினிற் கூவி யீந்தின்
றுடவையின் கனிக டாருத் தொறும்பறித் தீட்டு மென்னப்
படிபுகழ் கபீபு சொன்ன சொற்படி படர்ந்து செந்தேன்
குடிபுகுங் கனிக ளியாவு மரந்தொறுங் குவித்து வைத்தார்.
7
(இ-ள்) அவ்வாறு சேர்ந்து
வெற்றியை யுண்டாக்கின்ற அந்தச் சாபிறு றலியல்லாகு அன்கு அவர்களைப் பக்கத்திற் கூப்பிட்டு
அவ்வீத்தஞ் சோலையினது மரங்க ளெல்லாவற்றிலு முள்ள பழங்களைப் பறித்துக் குவியுமென்று கூற, இவ்வுலகமானது
துதிக்கா நிற்கும் ஹபீபென்னுங் காரணப் பெயரையுடைய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபிகாத்திமுல்
அன்பியா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் சொல்லிய சொற்பிரகாரம்
அவர்கள் போய் செந்நிறத்தைக் கொண்ட மதுவானது மாறாதிருக்கின்ற பழங்க ளெல்லாவற்றையும்
மரங்கள் தோறும் பறித்துக் குவித்து வைத்தார்கள்.
4292.
அக்கணத் தெகூதிக் காபிர் தம்மையங் கழைத்து முன்ன
மிக்கநுங் கடமை யாவும் விருப்புற வெவருங் காண
விக்குவை தன்னி னீவி ரளந்துகொண் டேகு மென்றார்
புக்கியாண் டன்னோர் தங்கள் பொலிகட னளந்து போனர்.
8
(இ-ள்) அவ்வாறு வைக்க,
அந்தச் சமயத்தில் அந்த எகூதிக் காபிர்களான கடன்காரர்களை அங்குக் கூப்பிட்டு நீங்கள்
யாவரும் பார்க்கவும், விருப்பமானது பொருந்தவும் மேலாகிய உங்கள் கடன்றொகை யனைத்தையும் இந்தக்
குவியலில் நின்றும் முதலில் அளந்து கொண்டு போகுங்க ளென்று சொன்னார்கள். அவர்களும்
|