முதற்பாகம்
பருப்பதராசனைக் கண்ணுற்ற
படலம்
கலிநிலைத்துறை
2208.
ஆர ணப்பொரு ளகுமது மவதியுற் றதனாற்
கார ணப்பல னறிந்தும்வஞ்
சனையெனுங் காபிர்
பார ணைத்தெறிந்
திருகவுண் மதசலம் பரப்பும்
வார ணத்தினு மும்மடங்
கெனும்படி வலித்தார்.
1
(இ-ள்) வேதப்
பொருளாகிய அஹ்மதென்னுந் திரு நாமத்தையுடைய நாயகம் ஹபீபு றப்பீல் ஆலமீன் முகம்மது முஸ்தபா
றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் துன்ப மடைந்ததினால், காரணத்தினது பிரயோசனத்தை யுணர்ந்தும்
வஞ்சனை யென்று சொல்லும் காபிர்கள் பூமியை யணைத்து வீசி இரண்டு கவுட்களிலுமுள்ள மதநீரைப்
பரப்பா நிற்கும் யானைகளைப் பார்க்கிலும் மும்மடங்கென்று கூறும்படி வலித்தார்கள்.
2209.
மிகைத்த வீறரி
முழைபுகுந் தெனவிற னயினா
ரகத்திற் றுன்பினி
லடங்கின ரெனவறி கிலராய்ப்
பகைத்த புன்மனக்
கொடியவர் பெரும்பகை தொடுத்தா
ரிகத்தி னும்மறு
புரத்தினு மிவையிலை யெனவே.
2
(இ-ள்) அன்றியும்,
அதிகப்பட்ட வலிமையைக் கொண்ட சிங்கமானது குகையிற் புகுந்ததைப் போலும் வெற்றியையுடைய நயினாரான
நமது நாயகம் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் மனதின் கண்ணுள்ள
வருத்தத்தினால் அடங்கினார்க ளென்று உணராதவர்களாய் இவ்வுலகத்தி னிடத்தும் வானலோகத்தி னிடத்தும்
இவைகளில்லா யென்று கூறும் வண்ணம் விரோதித்த கீழ்மையான மனத்தை யுடைய கொடியவர்களாகிய
காபிர்கள் பெரிய பகையைத் தொடுத்தார்கள்.
2210.
குறைசி யங்குலக்
காபிர்கள் விளைத்திடுங் கொடுமை
யறவு மேல்வளர்ந்
தனகுறைந் திலஅபித் தாலி
பிறைவன் முன்விதி
யமைத்திடும் படியிவ ணிறந்து
நிறையுந் திங்களு
மூன்றெனத் தினநிகழ்ந் தனவே.
3
(இ-ள்) அழகிய
குறைஷிக் குலத்தினது காபிர்கள் அவ்வாறு விளையும்படி செய்திடும் அநியாய மானவைகள் மிகவும்
|