முதற்பாகம்
பிரகாசமானது விளங்குகின்ற நபிமுகம்மது
சல்லல்லாகு அலைகிவசல்லமவர்களுக்குத் தரித்திருக்கும்
கச்சிலடங்காது பொருதாநிற்கும் ஸ்தன பாரங்களையுடைய
ஹலிமா அவர்கள் மனமகிழ்ந்து உவப்படையும்படி வயசும்
இரண்டாயின.
380. கதிருடன் கதியு மொருவடி வெடுத்த
காட்சிபெற் றிருந்தணி
சிறந்து
மதியினு மொளிரு முகம்மது நபிக்கு
வயதிரண் டானதன் பின்னர்
குதிகொளு மமுத மடிக்கடி சுரந்து
கொடுத்திடு முலைமறப் பித்துப்
பதியினி லிருந்து பொற்பதி புரக்கும்
பலன்படைத் துவந்தன ளன்றே.
90
(இ-ள்)
அவ்வாறு கதிருடன் கதியும் சேர்ந்து ஒப்பில்லாத
மனுவடிவமெடுத்த தோற்றத்தைப் பெற்றிருந்து அழகானது
சிறந்து சந்திரனைப் பார்க்கிலும் அதிகமாய்ப்
பிரகாசிக்கும் நபிமுஹம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல
மவர்களுக்கு இரண்டு வயசான பின்னர், ஹலிமா அவர்கள்
உடனைக்குடன் ஊறி வெளியிற் பாயா நிற்கும் அமுதத்தைக்
கொடுக்கின்ற முலையை மறப்பித்து இவ்வுலகத்தின்
கண்ணிருந்து பொன்னுலகத்தை யாளும் பிரயோசனத்தையும்
பெற்று மகிழ்ச்சியடைந்தார்கள்.
381. நெறித்திருண் டடர்ந்த செழுமழைக் கூந்த
னேரிழை வனமுலை யலிமாக்
குறித்தசெம் பவளம் விரிந்தெனத் தேன்பாய்
கொழுமடற் குமுதவாய் திறந்து
செறித்ததிண் மாட மக்கமா நகரிற்
செல்குவந் தருணமீ தென்னப்
பொறித்தபொற் குவட்டைப் பணைத்தெழும் புயத்துப்
புரவல னாரிதுக் குரைத்தாள்.
91
(இ-ள்)
அவ்விதம் மகிழ்ச்சி யடைந்த மடிப்புக் கொண்டு கறுத்து
நெருங்கிய செழுமையுற்ற மேகம் போலும் கூந்தலையும்
நேர்மையான ஆபரணங்களைத் தாங்கிய இளமுலைகளையு முடைய
ஹலிமா அவர்கள் சித்திரங்கள் எழுதப் பெற்ற
பொன்மலையைப் போலப் பருத்து எழா நிற்குந்
தோள்களையுடைய அரசரான ஆரிதவர்களுக்குச் செவ்விய
பவளமானது விரிந்தாற் போலத் தேனொழுகும் செழிய
இதழ்களையுடைய செவ்வாம்பற் பூப்போலுந் தங்களது
வாயினைத் திறந்து நெருங்கிய வலிமை பொருந்திய
மாடங்களை யுடைய மக்கமா நகரத்திற்குப் போகுவோம்.
அதற்குச் சரியான சமயம் இதுதானென்று சொன்னார்கள்.
|