முதற்பாகம்
நாட்டுப்படலம்
அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்
21.
தருங்கொடை
நயினார் கீர்த்தி சகமெலாம் பரந்து மிஞ்சி
நெருங்கியே
விசும்பி லண்ட முகடுற நிறைந்த வேபோ
லிருங்கண வெள்ளை
மேக மிரைபசுங் கடல்வீழ்ந் துண்டோர்
கருங்கட லெழுந்த
தென்னக் ககனிடை செறிந்து மீண்ட.
1
(இ-ள்) ஈகையைத் தரா நிற்கும்
நயினாரான நமது நாயகம் எம்மறைக்குந் தாயகம் நபிகட் பெருமான் நபி ஹபீபு றப்பில் ஆலமீன்
காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்லமவர்களின் புகழானது
இவ்வுலக முழுவதும் பரவி அதிகப்பட்டு நெருக்கமுற்று ஆகாயத்தின்கண் வானத்தினது உச்சியைப்
பொருந்தும் வண்ணம் நிறைந்ததைப் போலப் பெரிய கூட்டமாகிய வெண்ணிறத்தை யுடைய மேகங்களானவை
சந்திக்கின்ற பசிய சமுத்திரத்தி னிடத்து விழுந்து அச்சமுத்திரத்தின் ஜலத்தை அருந்தி ஒரு
கரிய கடலானது எழுந்ததை யொத்து நெருங்கி ஆகாயத்தினிடத்துத் திரும்பின.
கலிநிலைத்துறை
22.
அகில மெங்கணுந்
திடுக்கிட வாய்திறந் ததிர்ந்து
மிகும ழைக்குல
மடிக்கடி விழிப்பபோன் மின்னிக்
ககன மெண்டிசை
யடங்கலும் பரந்துகா லூன்றிச்
சிகர பூதர
மறைதரச் சொரிந்தன செருமி.
2
(இ-ள்) அவ்வாறு திரும்பிய
மிகுந்த கூட்டமாகிய மேகங்களானவை இந்தப் பூலோக மெவ்விடத்தும் திடுக்கிடும்படி வாயைத்
திறந்து இடித்து அடிக்கடி கண்களை விழிப்பன போன்று மின்னி ஆகாயத்தினது எண்டிசைக
ளெல்லாவற்றிலும் நெருங்கி பரவிக் காலூன்றி கொடுமுடியை யுடைய மக்கமா நகரத்தினது மலையானது
மறையும் வண்ணம் ஜலத்தைப் பெய்தன.
23.
அதிரு மாமழைத் துளியிடை யிடையணி யணியாய்
முதிரு மிந்திர
கோபமு மாலியு முதிர்ந்த
கதிர்செய்
முத்தமு மாணிக்க ராசியுங் கலந்தே
யுதிரும்
வண்ணமொத் திருந்தன கிரியொருங் கொருங்கே.
3
(இ-ள்) அன்றியும்,
ஒலியாநிற்கும் பெருமை தங்கிய அந்த மழைத் துளியினிடை யிடை வரிசை வரிசையாக முற்றிய இந்திர
|