பக்கம் எண் :

சீறாப்புராணம்

291


முதற்பாகம்
 

     736. கரைபுரண் டுள்ளகங் களித்துக் கானிடைத்

        திரவியந் திரைக்கரத் தெடுத்துச் சிந்தியே

        குரைகட லெனுநதி குரிசி னந்நபி

        மரைமல ரடிதொழ வந்த போலுமே.

14

     (இ-ள்) அன்றியும், ஒலிக்காநின்ற சமுத்திரமென்னும் அவ்வாறானது இருகரைகளிலும் புரண்டு தனது மனசினகம் சந்தோஷித்து காட்டினிடத்துள்ள திரவியங்களை அலைகளென்னுங் கைகளினால் எடுத்துச் சிதறிக் கொண்டு குரிசிலாகிய நமது நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்களின் தாமரைமலர் போலுந் திருவடிகளை வணங்கும்படி வந்ததை நிகர்த்தது.

 

     737. மானதி பெருகியெவ் வரையுஞ் சுற்றிய

        நானிலத் திசைநெறி நடப்ப தின்மையாற்

        றானவன் றூதொடு சார்ந்த மன்னரு

        மீன்மின் மூன்றுநா ளிருந்து நோக்கினார்.

15

     (இ-ள்) அவ்வாறு அந்தப் பெருமைதங்கிய ஆறானது பெருக்கமுற்று எல்லா மலைகளையும் நான்கு வகைப்பட்ட இப்பூமியின்கண்ணுள்ள திசைகளினது பாதைகளையும் சுற்றிக் கொண்டது. அதனால் நடந்து செல்லுவதற்கு இடமில்லாது தானவனான ஹக்குசுபுகானகுவத்த ஆலாவின் றசூலாகிய நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்களுடன் மற்றும் வியாபாரிகளான அரசர்களும் மூன்று நாள் மட்டும் குற்றமில்லாது அம்மலையின் மேலிருந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

 

     738. மலைமிசை மூன்றுநா ளிருந்து மானதி

        யலையெடுத் தெரிந்துயர்ந் தடர்ந்த தல்லது

        நிலைதரக் காண்கிலோ மென்ன நீண்டசஞ்

        சலமெனுங் கடற்குளாய்த் தவித்து வாடினார்.

16

     (இ-ள்) அவ்வாறு அவர்களியாவரும் அந்த மலையின் மீது மூன்று நாள் பரியந்தம் தங்கியிருந்தும் பெருமைபொருந்திய அவ்வாறானது திரைகளையெடுத்து இருகரைகளிலும் வீசி உயர்ச்சியுற்று அடர்ந்ததேயல்லாமல் நிலைதரும்படி கண்டிலோமேயென்று சொல்லி நீட்சியுற்ற சஞ்சலமென்னும் சமுத்திரத்தினுள்ளாய்த் தவித்து வாட்டமடைந்தார்கள்.

 

     739. மனத்தினிற் றுன்புற வருந்தி மாழ்கிய

        வினத்தவ ரியாரையு மினிதி னோக்கியே

        கனத்தமைக் குடைநிழல் கவின்பெற் றோங்கிய

        நனைத்துணர்ப் புயத்தவர் நவில லுற்றனர்.

17