முதற்பாகம்
மணம் பொருத்து படலம்
அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்
1034.
உடல்குழைத் தெழுந்து
செந்தே னொழுக்கிய மலர்ப்பைங் காவில்
வடவரை யனைய திண்டோள்
வள்ளலு மறுவி லாத
கடகரி யனைய வெற்றிக்
காளையர் பலருஞ் சேர்ந்த
விடபமும் பரியுந்
துன்ன வெழுந்தனர் விரைவி னன்றே.
1
(இ-ள்) மகாமேரு பருவதத்தைப் போன்ற திண்ணிய
தோள்களையுடைய நாயகம் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்லமவர்களும் குற்றமற்ற
மதத்தைச் சொரியா நிற்கும் யானைகட்கொப்பாகிய வெற்றியினையுடைய காளையர்களான மற்றும்
வியாபாரிகளெல்லாவரும் தங்களுடன் பொருந்திய எருதுகளும் குதிரைகளும் நெருங்கும் வண்ணம் மரங்களானவை
தங்களது சரீரத்தைக் குழையும்படி செய்து எழும்பிச் சிவந்ததேனைத் துளியா நிற்கும் பூக்களையுடைய
தாங்கள் தங்கி இருந்த பசிய அந்தச் சோலையைவிட்டும் விரைவாக எழும்பினார்கள்.
1035.
சோலைவாய் விடுத்து
நீந்தித் துவசமுங் குடையு மல்க
நீலமா மங்கு லங்கேழ்
நெடுங்குடை நிழற்ற வெற்றிக்
காலவேல் கரத்தி
லேந்திக் காளையர் மருங்கு சூழ
மாலையொண் புயத்தி
லோங்க முகம்மது மினிதின் வந்தார்.
2
(இ-ள்) அவ்விதம் எழும்பிய நாயகம் நபிமுகம்மது
சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களும் அந்தச் சோலையினிடத்தை விட்டுக் கடந்து கொடிகளும் குடைகளும்
நிறையவும், நீலநிறத்தையுடைய பெருமை தங்கிய மேகங்கள் அழகிய பிரகாசத்தையுற்ற குடையினது நிழலைச்
செய்யவும் வெற்றியான தொளிரும் வண்ணம் வேலாயுதத்தைக் கைகளினால் தாங்கிக் கொண்டு காளையர்களாகிய
வியாபாரிகள் பக்கத்திற் சூழவும் புஷ்பமாலையானது ஒள்ளிய தோள்களில் கிடந்தோங்கவும், இனிமையுடன்
நடந்து வந்தார்கள்.
|