பக்கம் எண் :

சீறாப்புராணம்

4


முதற்பாகம்
 

     2. சிறந்தமெய்ப் பொருளை யழிவிலா மணியைத்

           தெரிந்துமுக் காலமு முணர்ந்து

       துறந்தவ ரிதயா சனத்திருந் தவனைத்

           துடரின்ப துன்பமற் றவனைப்

       பிறந்தபல் லுயிரின் மனத்தள வுறைந்து

           பிறப்பிறப் பென்றிலா தவனை

       மறந்தவர் சுவர்க்கப் பதியையு மறந்து

           மண்ணினின் மதிமறந் தவரே.

2

பதவுரை

      சிறந்த மெய்ப் பொருளை - சிறப்பினையுடைய சத்தியவத்துவை, அழிவு இலாமணியை - கெடுதலற்ற இரத்தினத்தை, தெரிந்து - யாவற்றையும் பார்த்து, முக்காலமும் உணர்ந்து - வருங்காலம் நிகழ்காலம் செல்கால மென்னும் மூன்று காலங்களையு மறிந்து, துறந்தவர் - இவ்வுல காசையை நீத்தோர்களின், இதயம் ஆசனம் அத்து - மனமாகிய தவிசி னிடத்து, இருந்தவனை - தங்கினவனை, துடர் இன்பம் துன்பம் - பின் பற்றாநிற்கும் சுகமும் துக்கமும், அற்றவனை - இல்லாதவனை, பிறந்த பல் உயிரின் - அவதரித்த பல ஜீவராசிகளின், மனம் அத்து அளவு உறைந்து - அகத்தி னளவு தங்கி, என்று - எக் காலமும், பிறப்பு இறப்பு - தோற்றமும் நாசமும், இல்லாதவனை - அற்றவனை, மறந்தவர் - மறந்தவர்கள், சுவர்க்கப் பதியையும் மறந்து - சுவர்க்க லோகத்தையு மறந்து, மண்ணினில் பூமியின்கண், மதிமறந்தவர் - அறிவையும் மறந்தவர்களாவர்.

 

பொழிப்புரை 

      சிறப்பினையுடைய சத்தியவத்தைக் கெடுதலற்ற இரத்தினத்தை, யாவற்றையும் பார்த்து வருங்காலம் நிகழ்காலம் செல்கால மென்னும் மூன்று காலங்களையு மறிந்து, இவ்வுலகாசையை நீத்தோர்களின் மனமாகிய தவிசினிடத்துத் தங்கினவனைப், பின்பற்றாநிற்கும் சுகமும் துக்கமும் இல்லாதவனை, அவதரித்த பல ஜீவராசிகளின் அகத்தினளவு தங்கி எக்காலமும் தோற்றமும் நாசமும் அற்றவனை, மறந்தவர்கள் சுவர்க்க லோகத்தையு மறந்து பூமியின்கண் அறிவை மறந்தவர்களாவர்.

 

      3. இருவிழி சிவந்து கனற்பொறி தெறிப்ப

            வெடுத்ததைக் கதையினா லுறுக்கி

        வருமவ ரெதிர்நின் றொருமொழி கேட்ப

            மறுமொழி கொடுத்திட வறியேன்