பக்கம் எண் :

சீறாப்புராணம்

615


முதற்பாகம்
 

உத்துபாவந்த படலம்

 

அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்

 

1638. அடவியினி லுடும்பகல அறபிவே

         டனுமறிவுள் ளகத்திற் றேக்கிப்

     புடையகலா நிழல்போலுந் தோழருட

         னகுமதையும் புகழ்ந்து போற்ற

     மடலவிழ்பைங் குவளைசெறி மடுச்சூழு

         நீள்புரிசை மக்க மீதி

     லுடுவினமு நடுவுறையு நிறைமதியு

         நிகர்த்திடவந் துறைந்தா ரன்றே.

1

      (இ-ள்) நபிகள் பெருமானவர்களின் சந்நிதியிலிருந்த அந்த உடும்பானது காட்டின்கண் நீங்கிச் செல்ல அறபியாகிய இஸ்லாமான வேடரும் மனத்தினகம் அறிவானதை நிறையும்படி செய்து பக்கம் விட்டு நீங்காத நிழலைப் போன்ற தோழர்களான அசுஹாபிமார்களுடன் அஹ்மதென்னுந் திருநாமத்தையுடைய நாயகம் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களையும் துதித்து வணங்கும் வண்ணம் அவர்கள் இதழ்களானவை நெகிழ்ந்த பசிய குவளைப் புஷ்பங்கள் நெருங்கிய தடாகங்கள் வளையப் பெற்ற நீண்ட கோட்டை மதிலையுடைய திருமக்கமா நகரத்தின்கண் நட்சத்திரக் கூட்டங்களையும் அவற்றின் மத்தியில் தங்கா நிற்கும் பூரணச் சந்திரனையும் ஒப்பாகும்படி வந்து தங்கியிருந்தார்கள். 

 

1639. திரைக்கடலி னடுவெழுந்த மதிக்கதிர்போன்

         முகம்மதுதஞ் செழுந்தீன் செவ்வி

     நிறைத்தெழுந்த பயிர்போலத் தழைத்தோங்க

         நிலைநிறுத்தி நிகழுங் கால

     முரைக்கடங்கா வெகுளிபொங்கு மனத்தினராய்க்

         குபிர்த்தலைவ ரொருங்கு கூடி

     வரைத்தடத்தைக் கொதுகினங்க ளரிப்பதெனச்

         சிலவசனம் வளர்க்கின் றாரால்.

2

      (இ-ள்) அலைகளையுடைய சமுத்திரத்தின் மத்தியில் உதயமான சந்திரனின் கிரணங்களை நிகர்த்த நாயகம் நபிமுகம்மது