முதற்பாகம்
தசைக்கட்டியைப்
பெண்ணுருவமைத்த படலம்
எழுசீர்க்கழி
நெடிலடியாசிரிய விருத்தம்
1939. மருமலர் சுமந்து
தேன்வழிந் தொழுகு
மணிப்புய முகம்மது நபியுந்
தெரிதருந் தீனி னெறிமுறை யவருஞ்
சிந்தையிற் களிப்பொடுஞ் சிறப்ப
அரியமெய்ப் பொருளை முறைமுறை வணங்கி
யற்றையிற் கடன்கழித் தமரர்
திருவடி பரவத் தம்முயி ரனைய
செல்வரோ டுறைந்திடுங் காலை.
1
(இ-ள்) வாசனை பொருந்திய புஷ்ப
மாலையைத் தாங்கித் தேனானது வழிந் தொழுகா நிற்கும்
அழகிய தோள்களை யுடைய நமது நாயகம் நபி முகம்மது முஸ்தபா
றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களும், தீனுல் இஸ்லா
மென்னும் மார்க்க நெறியினது முறைமைகளைத் தெரிந்த
மற்றும் அசுஹாபிமார்களும், தங்களி னிருதயத்திற்
சந்தோஷத்தோடும் சிறப்பாய் அருமையான உண்மைப்
பொருளாகிய அல்லாகு சுபுகானகு வத்த ஆலாவை வரிசை
வரிசையாகப் பணிந்து அன்றைய தினத்திற் குரிய
கடன்களைச் செய்து முடித்துத் தேவரான
மலாயிக்கத்துமார்கள் தெய்வீகம் பொருந்திய இரு
பாதங்களையும் வணங்கும் வண்ணம் தங்களி னுயிரைப்
போன்ற செல்வமுற்ற தோழர்களோடும் தங்கி யிருக்கின்ற
சமயத்தில்.
1940. பூரணக் களபக் கனதன மடவார்
பொருதிரைக் கவரிகா லசைப்ப
வாரணி முரச மதிர்தரச் சீறு
மடங்கலின் கொடிமுனங் குலவ
வாரணத் தலைவர் மருங்கினிற் பிரியா
தரசர்க ளுடன்வரத் தொலையாக்
காரணக் குரிசின் முகம்மதி னிடத்தில்
வந்தனன் கபீபெனு மரசன்.
2
(இ-ள்) ஹபீபென்று சொல்லா
நிற்கும் அபிதானத்தையுடைய அரசன் கலவைச் சாந்தணிந்த
பூரணமாகிய கனத்தைக் கொண்ட ஸ்தன பாரங்களை யுடைய ஏவற்
பெண்கள் சமுத்திரத்தினது
|