முதற்பாகம்
அத்தாசீமான் கொண்ட படலம்
அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்
2243.
மறைகலை புகழ்ந்த
செவ்வி முகம்மது தனித்துத் தாக
நிறையொடும் பசியுந்
துன்னி நீணெறி யிருப்ப வவ்வூ
ரிறபீஆ புதல்வர்
தம்மி லிருவர்க ளினிது நோக்கிக்
குறைவிலா மனத்தி
னோர்ந்து மனையிடங் குறுகி னாரால்.
1
(இ-ள்) வேத
சாஸ்திரங்கள் துதியா நிற்கும் அழகை யுடைய நமது நாயகம் எம் மறைக்குந் தாயகம் நபிகட்
பிரானார் நபி ஹபீபு றப்பில் ஆலமீன் முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள்
ஏகமாய் நிறைந்த தாகத்துடன் பசியும் நெருக்கமுற்று நீண்ட அந்தப் பாதையின்கண் இருக்க, அதை
அக்கருனு தாலிபென்னும் பதியிலுள்ள இறபீஆ வென்பவனின் புத்திரர்களில் இருவர்கள் இனிமையுடன்
பார்த்துக் குறைவற்ற மனசின்கண் ஓர்ந்து தமது வீட்டினிடத்துப் போய்ச் சேர்ந்தார்கள்.
2244.
அன்னவர் தொழும்ப னத்தா சென்பவ னவனைக் கூவிக்
கன்னலஞ்
சுவையின் மிக்காந் திருகையின் கனியை யேந்தி
யின்னணங்
கொடுபோ யாண்டி னிருப்பவர் கரத்தி னீந்து
பன்னரும் பசியை
மாற்றி வாவெனப் பரிவிற் சொன்னார்.
2
(இ-ள்) அவ்வாறு
சேர்ந்த அந்த இறபிஆ வென்பவனின் புத்திரர்கள் தங்களின் தொண்டனாகிய அத்தா சென்று கூறப்பட்டவனான
அவனைக் கூப்பிட்டு அழகிய கரும்பினது இரசத்திலு மதிகமாகிய முந்திரிகைப் பழத்தை இவ்விதம் ஏந்தி
கொண்டு சென்று அந்தத் தானத்திலிருக்கப் பட்டவரின் கையிற் கொடுத்துச் சொல்லுதற்கரிய பசியை
நீக்கி வருவாயாக வென்று அன்போடுங் கூறினார்கள்.
2245.
காசறுந் தட்டத்
திட்ட பழத்தினைக் கரத்தி லேந்தித்
தூசினிற் பொதிந்து
தோளிற் சுமந்தரு நெறியை முன்னிப்
பாசடைத் தருக்க
ளியாவும் பலமலர் சொரிய வாய்ந்த
வாசமூ டுலவுஞ் செவ்வி
முகம்மது திருமுன் வைத்தான்.
3
(இ-ள்) அவ்விதம்
அவர்கள் கூற அத்தொண்டனாகிய அத்தா சென்பவன் குற்றமற்ற தட்டத்தின்கண் இடப்பட்ட கனியைக்
கைகளாற் றாங்கி வஸ்திரத்தினால் மூடித் தோளின்கண் வைத்துச் சுமந்து அருமையான பாதையை
நெருங்கிச் சென்று பசிய
|