பக்கம் எண் :

107

14. திருநறையூர் என்னும் நாச்சியார் கோவில்

     அம்பரமும் பெரு நிலனும் திசைகளெட்டும்
          அலைகடலும் குலவரையும் உண்ட கண்டன்
     கொம்பமரும் வடமரத்தினிலை மேல் பள்ளி
          கூடினான் திருவடியே கூடுகிற்பீர்
     வம்பவிழும் செண்பகத்தின் வாசமுண்டு
          மணிவண்டு வகுளத்தின் மலர் மேல் வைகு
     செம்பியன் கோச் செங்கணான் சேர்ந்த கோயில்
          திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே
                  (1498) - பெரிய திருமொழி 6-6-1

     ஆகாயம், நிலம், எட்டுதிசைகள், அலைகடல், மலைகளுடன்,
புவிமுழுவதையும் விழுங்கி வடமரம் என்னும் ஆலமரத்தின் இலைமேல்
பள்ளிகொள்ளக் கூடிய எம்பெருமானின் திருவடியில் கூடுங்கள். செண்பக
மலர்களின் வாசனையோடு மணம்மிக்க வகுள மலர்கள் மேல் வண்டுகள்
ரீங்காரம் செய்யக்கூடிய திருநறையூரில் எழுந்தருளியிருக்கும்
எம்பெருமானிடம் சோழ வேந்தன் கோச்செங்கண் தொழுதிறைஞ்சிச் சேர்ந்த
திருநறையூர் மணிமாடம் சேருமின்கள் என்று திருமங்கையாழ்வாரால்
மங்களாசாசனம் செய்யப்பட்ட இத்திருத்தலம், தற்போது நாச்சியார் கோவில்
என்றே பிரதானமாக வழங்கப்பட்டு வருகிறது.

     இத்தலம் கும்பகோணத்திலிருந்து திருவாரூர் செல்லும் சாலையில் சுமார்
4 மைல் தொலைவில் அமைந்துள்ளது.

வரலாறு

     பிரம்மாண்ட புராணத்தில் சௌநக சம்வாதம் என்னும் பகுதியில் 12
அத்தியாயங்களில் இத்தலம் பற்றி பேசப்பட்டுள்ளது.

     பிள்ளைப் பெருமாள் அய்யங்காரின் நம்பி மேக விடுதூது என்னும்
நூலும் திரு.டி நரசிம்மாச்சாரியின் திருநறையூர் இரட்டை மணி மாலை
என்னும் நூலும் திருமங்கையாழ்வாரின் பாசுரங்களும் இத்தலத்தைப்பற்றி
பரக்கப் பேசுகின்றன.