பக்கம் எண் :

212

33. திருவைகுந்த விண்ணகரம் (திருநாங்கூர்)

     சங்குமலி தண்டு முதல் சக்கர முனேந்தும்
          தாமரைக்கண் நெடிய பிராந் றானமருங் கோயில்
     வங்கமலி கடலுலகில் மலி வெய்து நாங்கூர்
          வைகுந்த விண்ணகர் மேல் வண்டறையும் பொழில்சூழ்
     மங்கையர்தம் தலைவன் மருவலர்தம் முடல் துணிய
          வாள் வீசும் பரகாலன் கலிகன்றி சொன்ன
     சங்கமலி தமிழ் மாலை பத்திவை வல்லார்கள்
          தரணியொடு விசும்பாளும் தன்மை பெறுவார்களே (1237)
                              - பெரிய திருமொழி 3-9-10

     என்று திருமங்கையாழ்வாரால் பாடப்பட்ட இத்தலம் திருநாங்கூரிலேயே
உள்ளது. வைகுண்டமான பரமபதத்தில் சங்கு சக்கரங்களுடன்
எழுந்தருளியுள்ள வைகுண்டநாதனே இந்த வைகுந்த விண்ணகரத்தில்
உள்ளான்.

     சிவனின் ருத்ர தாண்டவத்தை நிறுத்த பரமபத நாதன் புறப்பட்டு வர
அவரைப் பின்பற்றி 10 பெருமாள்களும் இவிடம் (திருநாங்கூர்) வந்தனர்.
பரமபதத்தில் இருந்து வந்ததால் அங்கு எவ்விதம் நித்ய சூரிகட்கு காட்சி
கொடுக்கிறானோ அதே போல் இங்கும் எழுந்தருளியுள்ளார்.

மூலவர்

     வைகுந்த நாதன், தாமரைக் கண்ணுடைய பிரான். உபய நாச்சிமார்கள்
புடைசூழ கிழக்கு நோக்கி வீற்றிருந்த திருக்கோலம்.

தாயார்

     வைகுந்த வல்லி

உற்சவர்

     மூலவருக்குரைத்த அதே பெயர்கள்

தீர்த்தம்

     லட்சுமி புஷ்கரணி, உத்தங்கபுஷ்கரணி, விரஜா

விமானம்

     அனந்த ஸத்ய வர்த்தக விமானம்