பக்கம் எண் :

268

தொண்டைநாட்டுத் திவ்ய தேசங்கள் ஒரு விளக்கம்

     மேற்குப் பவளமலை வேங்கடம் நேர் வடக்காம்
          ஆர்க்கு முவரி யணிகிழக்கும் - பார்க்குளுயர்
     தெற்குப் பினாகி திகழிருபதன் காதம்
          நற்றொண்டை நாடெனவே நாட்டு
                             - பெருந்தொகை 2102

     தொண்டை நாடென்பது வடவேங்கடம் முதல் புராணங்களிலும்
வடநூல்களிலும் பினாகி எனக் குறிக்கப்படும் தென்பெண்ணையாற்றை
தெற்கெல்லையாகவும், கிழக்கே கடலையும், மேற்கே பவள மலையினையும்
எல்லையாகக் கொண்டு விளங்கிய பெரு நிலப்பரப்பு. மிகப்பழங்காலத்தில்
தொண்டைநாடு குறும்பர் நிலம் எனப்பட்டது. குறும்பர் தம் ஆடுமாடுகளை
மேய்த்துக் கொண்டு அங்கு வாழ்ந்தனர். இவர்கள் தம் நாட்டை 24
கோட்டங்களாக வளர்த்தனர் என்பர் வரலாற்றாசிரியர். இந்நாடு சங்க
காலத்தில் அருவா நாடு எனப்பட்டது. இதன் வடபகுதியை அருவா வடதலை
நாடென பழந்தமிழ் இலக்கியங்கள் குறிக்கின்றன. இது மலைவளமும் நாட்டு
வளமும் மிக்கது. கரிகாலன் இதைக் கைப்பற்றி காடு கெடுத்து நாடாக்கினான்.
பின்னர் தொண்டைக் கொடியால் சுற்றி கடல்வழி வந்த நாக கன்னிகையான
பீலிவளயின் மகனான இளந்திரையன் ஆண்டதால் தொண்டை மண்டலம்
எனப் பெயர் பெற்றதாக தமிழ் நூல்களால் அறிகிறோம்.

     தொண்டை மண்டலத்தில் வடபகுதியான அருவா வடதலை நாட்டை
திரையன் ஆண்டான். அவன் தலைநகர் பவத்திரியாகும். இளந்திரையன்
என்பான் காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு தென்பகுதியை ஆண்டு
வந்தான்.

     இத்தொண்டை நாட்டின் மிகச்சிறந்த துறைமுகமாக கடன்மல்லை
(மாமல்லபுரம்) விளங்கியது. மாமல்லபுரத்தைப் பற்றி பெரும்பானாற்றுப்படை
அரிய செய்திகளை வழங்குகிறது.

     ஆனால் இன்றைய தமிழ்நாட்டில் தொண்டை நாடு என்றதும் நமக்கு
நினைவுக்கு வருவது காஞ்சி மண்டலமேயாகும். பண்டைக் காலந்தொட்டே
இலக்கியங்களாலும், புராணங்களாலும் புகழ்மாலை சூட்டப்பட்ட ஒன்றே
காஞ்சி மாநகரத்தின் தொல் புகழுக்குச் சான்றாகும். நகரமென்றாலே