பக்கம் எண் :

310

50. திரு ஊரகம்

     கல்லெடுத்து கல்மாரி காத்தாயென்றும்
     காமரு பூங் கச்சி யூரகத்தா யென்றும்
     வில்லிறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாயென்றும்
     வெஃகாவில் துயிலமர்ந்த வேந்தே யென்றும்
     மல்லடர்த்து மல்லரை யன்றட்டா யென்றும்
     மாகீண்ட கைத்தலத்தென் மைந்தாவென்றும்
     சொல்லெடுத்து தன் கிளியைச் சொல்லே யென்று
     துணைமுலை மேல் துளிசோரச் சோர்கின்றாளே. (2064)
                       திருநெடுந்தாண்டகம் - 13

     திருமங்கையாழ்வார் பிராட்டியின் வார்த்தையாக இப்பாசுரத்தை
மொழிந்துள்ளார். அதாவது பிராட்டி ஒரு கிளி வளர்க்கிறாள். அக்கிளியை
எடுத்து தன் நெஞ்சோடு ஒட்ட வைத்துக்கொண்டு தான் சொல்லிக் கொடுத்த
எம்பெருமானின் பெயர்களை எல்லாம் சொல்லச் சொல்லி கொஞ்சி
மகிழ்கிறாள்.

     கச்சி ஊரகத்தாய் என்று திருமங்கையாழ்வாரால் மக்களாசாசனம்
செய்யப்பட்ட இந்த “ஊரகம்” என்னும் திவ்யதேசம் காஞ்சி
நகரத்திற்குள்ளேயே அமைந்துள்ளது. தொண்டை மண்டலத்து
இருபத்தியிரண்டு திவ்ய தேசங்களுள் இதுவும் ஒன்று.

     இந்த ஊரகம் என்னும் திவ்ய தேசத்திற்குள்ளேயே நீரகம், காரகம்,
கார்வானம் ஆகிய மூன்று திவ்ய தேசங்கள் அமைந்துள்ளன. அதாவது இந்த
மூன்று திவ்ய தேசத்து எம்பெருமாள்களும் இந்த ஊரகம் ஸ்தலத்திற்குள்ளேயே
எழுந்தருளியிருக்கின்றனர்.

     இந்த மூன்று திவ்ய தேசங்களும் தொண்டை நாட்டிற்குள்
எங்கிருந்தனவென்று அறியமுடியவில்லை. எவ்விதம் மூவரும் இங்குவந்து
புகுந்தனர் என்பதும் அறியுமாறில்லை. நிச்சயமாக இத்தலங்கள் காஞ்சி
நகருக்கு வெளியே உள்ள திவ்யதேசங்களைப் போன்று எங்காவது
தனித்திருந்திருக்க வேண்டும். மதம் அல்லது அரசியல் சார்ந்த
யாதாயினுமோர் காரணத்தால் உண்டான விளைவுகளால் இத்தலங்கள்
மூன்றும் இடம் பெயர்ந்து அல்லது இப்பெருமான்கள் மூவரும் இடம்
பெயர்ந்து இங்கு வந்து சேர்ந்தனர் எனலாம்.