பக்கம் எண் :

340

56. திருப் பாரமேச்சுர விண்ணகரம்

     சொல்லுவன் சொற்பொருள் தானவையாய்ச் சுவை
          யூறாலி நாற்றமும் தோற்றமுமாய்
     நல்லரன் நான்முகன் நாரண னுக்கிடந்த
          தான் கடஞ் சூழ்ந்த ழகாய கச்சி
     பல்லவன் வில்லவ னென்று லகில் பல
          ராயாப் பல வேந்தர் வணங்கு கழல்
     பல்லவன், மல்லையர் கோள் பணிந்த பர
          மேச்சுர விண்ணகர மதுவே (1128)
                         -பெரியதிருமொழி 2-9-1

     என்று திருமங்கையாழ்வாரால் பாடிப் பரவசிக்கப்பட்ட இத்தலம் பெரிய
காஞ்சிபுரத்தில், காஞ்சிபுரம் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 3 பர்லாங்
தூரத்தில் உள்ளது.

     இத்தலத்தைப் பற்றிக் குறிப்பாக எந்தப் புராணத்தில்
சொல்லப்பட்டுள்ளது என்பது அறியுமாறில்லை. ஆனால் புராண காலத்தில்
இத்தலம் ஸர்ப்பச் சேஷத்ரம் என அழைக்கப்பட்டதாகவும், இங்கு
எழுந்தருளியிருந்த பிரான் பரமபத நாதன் என்று ஆராதிக்கப்பட்டதாகவும்
அறியமுடிகிறது.

     விதர்ப்ப நாட்டு மன்னன் புத்ர சந்ததி வேண்டி காஞ்சியில் உள்ள
கைலாச நாதனை வணங்க விஷ்ணுவின் துவார பாலகர்கள் இருவரும்
பல்லவன், வில்லவன் என்ற பெயர் கொண்டு பிறந்ததாகவும், அவ்விருவரும்
மஹா விஷ்ணுவைக் குறித்து இக்கோவிலின் வாயு மூலையில் அஸ்வமேத
யாகம் செய்ய மஹாவிஷ்ணு ஸ்ரீ வைகுண்டநாதனாக வீற்றிருந்த
திருக்கோலத்தில் காட்சி கொடுத்து அதே நிலையிலிருந்து இன்றும் பக்தர்கட்கு
அருளுவதாக ஐதீஹம்.

     ஒரு காலத்தில் இக்கோயில் காசி யாத்திரை செல்வோர் தங்கிச்
செல்லும் மடமாக இருந்தது. மிகச் சிறிய அளவினதாக இருந்த இத்தலம்
பல்லவ மன்னன் முதலாம் பரமேஸ்வரவர்மன் (கி.பி. 669) காலத்தில்தான்
இன்றுள்ள நிலையில் 3 அடுக்குகளாக கட்டப்பட்டது.

     பரமேஸ்வரவர்மன் பிறப்புக்கும் இத்தலத்திற்கும் உண்டான தொடர்பு
கீழ்வருமாறு பேசப்படுகிறது.