பக்கம் எண் :

352

58. திருநின்றவூர்

     ஏற்றினை யிமயத்து ளெம் மீசனை
          இம்மையை மறுமைக்கு மருந்தினை
     ஆற்றலை அண்டத் தற்புறத் துய்த்திடும்
          ஐ யனைக் கையிலாழி யொன்றேந்திய
     கூற்றினை, குருமாமணிக் குன்றினை
          நின்றவூர் நின்ற நித்திலத் தொத்தினை
     காற்றினைப் புணலைச் சென்று நாடிக்
          கண்ணமங்கயுள் கண்டு கொண்டேன் - (1642)
                          பெரியதிருமொழி 7-10-5

     என்று திருமங்கையாழ்வாரால் பாடிப் பரவசிக்கப்பட்ட இத்தலம்
சென்னையிலிருந்து பூந்தமல்லி வழியாகத் திருவள்ளூர்ச் செல்லும் சாலையில்
உள்ளது. ஏராளமான பேருந்துகள் இவ்வூர் வழியாகவே செல்கின்றன.
அரக்கோணம் ரயில் நிலையத்திலிருந்து தெற்கே சுமார் ஒருமைல் தூரம்
சென்றதும் இத்தலத்தை அடையலாம். திருநின்றவூர் என்று கேட்பதைவிட
திண்ணனூர் என்று சொன்னாலே எவருக்கும் புரியும். காலப்போக்கானது.
பெயர்ச் சொற்களை இந்த அளவிற்குத் திரித்து விடுகிறது.

வரலாறு.

     இத்தலம் பற்றி எந்தப் புராணத்தில் விரித்துரைக்கப்பட்டுள்ளது என்பது
அறியுமாறில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாகச் செய்திகள் விரவிக்
கிடக்கின்றன. இத்தலத்தைப் பற்றி இருந்த ஒரேயொரு ஸ்தல புராணம் கூட
முன்னும் பின்னும் பல பக்கங்கள் சிதலமடைந்த நிலையிலேயே இங்குள்ள
தேவஸ்தான அலுவலகத்தில் காணப்பட்டது. பிர்ம்மாண்ட புராணத்திலேயே
இத்தல வரலாறும் கூறப்பட்டுள்ள தென பல பெரியோர்கள் சொல்வர்.
திருமங்கையாழ்வார். திவ்ய தேசங்களை மங்களாசாசனம் செய்து கொண்டே
வரும் போது இத்தலத்தின் வழியாகச் சென்றும் இதனைப் பாடாது சென்றார்.
இதைக் கண்ட பிராட்டி, பெருமாளை எழுப்பி உடனே சென்று ஒரு பாசுரம்
பெற்றுவருமாறு சொல்ல, பெருமாள் வருவதற்குள் திருமங்கையாழ்வார்
திருவிடந்தை வந்து விட்டு, திருக்கடன் மல்லை (மாமல்லபுரம்) வந்துவிட்டார்.