பக்கம் எண் :

365

60. திருவல்லிக்கேணி

     இன்துணைப் பதுமத்து அலர்மகள் தனக்கும்
          இன்பன், நற்புவி தனக்கு இறைவன்
     தன்துணை ஆயர் பாவை நப்பின்னை
          தனக்கிறை, மற்றையோர்க் கெல்லாம்
     வன் துணை, பஞ்ச பாண்டவர்க்காகி
          வாயுரை தூது சென்று இயங்கும்
     என்துணை எந்தை தந்தை தம்மானை
          திருவல்லிக் கேணி கண்டேனே
                   (1072) பெரியதிருமொழி 2-3-5

     என்பது திருமங்கையாழ்வாரின் இன் தமிழ் தண்டமிழ்த் தலைநகரில்
அலைபுரளும் கடலோரம் அருள் செழிக்க வீற்றிருக்கும் திவ்ய தேசமிது.

வரலாறு.

     இத்தலத்தைப் பற்றி பிரும்மாண்ட புராணத்தில் பிருந்தாரண்ய
மகாமித்யம் என்ற பகுதியில் கூறப்பட்டுள்ளது. பிருந்தம் என்றால் துளசி.
ஆரண்யம் என்றால் காடு. எனவே பிருந்தாரண்யம் துளசி வனம் என்று
பொருள் கொள்ளப்படும்.

     சுமதி என்னும் மன்னன் வேங்கட மலையில் ஸ்ரீனிவாசப்பெருமாளை
வழிபட்டு அர்ஜு னனுக்கு தேரோட்டிய கண்ணனாக பெருமாளைக் காண
விழைவதாக எண்ணி தவத்திலிருக்க அப்போதே ஸ்ரீனிவாசன் அசரீராய் நீ
விரும்பிய தோற்றத்துடன் கைரவணி தீர்த்தங்கொண்ட பிருந்தாரண்யத்தில்
எழுந்தருளினேன் அங்கு சென்று தரிசிப்பாயாக என்று கூற, சுமதியும்
அவ்வாறு செய்தான் என்பது வரலாறு. ஆனால் இந்த பிருந்தாரண்யத்துக்கு
எப்போது பெருமாள் அவ்விதம் வந்தாரென்னில் வேத வியாசருக்கு
ஆத்திரேய முனிவர் என்னும் ஒரு சீடரிருந்தார். அவர் தம் குருவின்
கட்டளைப்படி பிருந்தாரண்யத்திற்குத் தவம் செய்ய வந்தபோது அவரால்
கொடுக்கப்பட்ட கண்ணனின் திவ்ய மங்கள விக்ரகமொன்றையுங் கொண்டு
வந்தார். அவ்விக்கிரகம் ஒரு கையில் சங்கேந்தியதாயும் மறு கையில் தான்
முத்திரையுடையதாயும் (தன் திருவடியில் சரணம் அடைய அருள்புரிதல்)
இலங்கியிருந்தது.