பக்கம் எண் :

401

66. திருவித்துவக்கோடு (திருமிற்றக் கோடு)

     வெங்கண்தின் களிற்டர்த்தாய்
          விற்றுவக் கோட்டம்மானே
     எங்கு போ யுய்கேனுன்
          இணையடியே யடையலல்லால்
     எங்கும் போய்க் கரை காணா
          தெறிகடல் வாய் மீண்டேயும்
     வங்கத்தின் கூம்பேறும்
          மாப்பறவை போன்றேனே
           (692) பெருமாள் திருமொழி 5 - 5

     நடுக்கடலில் ஒரு பறவை அகப்பட்டுக் கொண்டது. எங்கும் தண்ணீர்,
கரையோ, காடோ, பாதையோ தென்படவில்லை. இந்நிலையில் இங்கு ஒரு
கப்பல் வந்து கொண்டிருப்பது அதன் கண்ணில் பட்டது. விரைந்து பறந்து
கப்பலைச் சுற்றி சுற்றி வந்தது. ஆயினும் அது நாடாகவோ, இடமாகவோ
அதற்குப் படவில்லை. கப்பலை விடுத்துச் சற்றுத் தொலைவே சென்றது
எங்கும் கடல். ஒன்றும் புரியவில்லை. மீண்டும் கப்பலை நோக்கி வந்தது.
கப்பலின் உச்சியில் (பாய் மரக்கம்பத்தில்) மேலே உள்ள கூம்பு பகுதியை
மீண்டும் மீண்டும் சுற்றி வந்தது. ஆம் அதற்கு வேறு வழியில்லை. அந்த
நடுக்கடலில் கப்பலின் கூம்பை விட்டால் அதற்கு கதி இல்லை.

     அதைப்போல எம்பெருமானே நின் திருவடியைப் புகலிடமாகக்
கொண்ட நான் அதை விடுத்து எங்கு போய் உய்வேன். எங்கு போனாலும்
எதைக் கண்டாலும் அவையெல்லாம் நிலையற்றதாயும் பொருளற்றதாயும்
போகிறதே கூம்பினை நாடிச் செல்லும் நடுக்கடல் பறவை போல மானிடக்
கடலில் சிக்கித் தவிக்கும் ஜீவாத்மாவாகிய நான் நின்திருவடியே
சரணாகதியென்று புகாமல் வேறு எங்கு சென்று புகுவேன். வித்துவக்
கோட்டம்மானே நீயே எனக்குப் புகலிடமென்று நாட்டையும், அரச
பதவியையும் தூக்கியெறிந்த குலசேகராழ்வார் வித்துவக் கோட்டம்மானிடம்
சரண்புகுகிறார்.

     இவ்வாறு குலசேகராழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இத்தலம்
கேரளாவில் பாலக்காட்டு மாவட்டத்தில் உள்ள பட்டாம்பி என்னும் நகருக்கு
அருகில் அமைந்துள்ளது.