பக்கம் எண் :

459

78. திருக்குறுங்குடி

     கரண்ட மாடு பொய்கையுள்க
          ரும்பனைப் பெரும் பழம்
     புரண்டு வீழ வாளை பாய்கு
          றுங்குடி நெடுந்தகாய்
     திரண்ட தோளி ரணியன் சி
          னங் கொளாக மொன்றையும்
     இரண்டு கூறு செய்துகந்த
          சிங்க மென்ப துண்ணையே (813)
                       திருச்சந்த விருத்தம் 62

     கறவையினங்கள் (பசுக்கூட்டங்கள்) நிறைந்து விளங்கும் பொய்கையில்,
அப்பொய்கை கரையோரத்தே வளர்ந்தோங்கியுள்ள கரிய தோற்றமுடைய
பனைமரங்களிலிருந்து பனம் பழங்கள் வீழ்கின்றன. அவ்வாறு வீழும் பனம்
பழங்களை அப்பொய்கையில் வாழும் வாளை மீன்கள் பிடித்து தின்பதன்
பொருட்டு எகிறிப் பாய்கின்றன. இத்தகைய வளம்வாய்ந்த குறுங்குடியில்
எழுந்தருளியுள்ள எம்பெருமானே திரண்ட தோள்களை உடைய இரண்யனை
இரண்டு கூறுகளாக பிளந்து போட்ட நரசிங்கனும் நீதானே என்று
திருமழிசையாழ்வாரால் பாடப்பெற்ற இத்திருத்தலம் பாண்டி நாட்டுத் தலங்கள்
பதினெட்டில் ஒன்றாகும்.

     திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள இத்திருத்தலம் நான்குநேரி
எனப்படும் வானமாமலை திவ்ய ஷேத்திரத்திலிருந்து சுமார் 25 கி.மீ.
தொலைவில் உள்ளது. நாகர்கோவில் செல்லும் பாதையில் உள்ள வள்ளியூரில்
இறங்கியும் இத்தலத்திற்குச் செல்லலாம். தற்போது திருக்குறுங்குடி என்றே
பெயரிட்ட நகரப் பேருந்துகளும் பல முக்கிய நகரங்களிலிருந்து இவ்வூருக்கு
வருகின்றன.

வரலாறு.

     இத்தலத்தைப் பற்றி வராக புராணம் மிக விரித்துப் பேசுகிறது. கைசிக
புராணம் இத்தலத்திற்கு ஏற்பட்ட பெரும்பேறு வராஹ அவதாரங் கொண்ட
பெருமாள் தன் பிராட்டியோடு இங்குள்ள சிறுகுடிலில் சில காலம்
தங்கினமையால் குறுங்குடியாயிற்றென்பர். பயங்கரமான வராகரூபத்தை மிகவும்
குறுகச் செய்தமையாலும். குறுங்குடியாயிற்று என்பர்.