பக்கம் எண் :

480

81. திருவரகுணமங்கை

     புளிங்குடி கிடந்து வரகுண மங்கை
          யிருந்து வைகுந்தத்துள் நின்று
     தெளிந்த என் சிந்தை அகங்கழியாதே
          என்னையாள்வாய் எனக்கருளி
     நளிர்ந்த சீருலகம் மூன்றுடன் வியப்ப
          நாங்கள் கூத்தாடி நின்றார்ப்ப
     பனிங்கு நீர் முகிலின் பவளம் போல்
          கனிவாய் சிவப்ப நீ காண வாராயே
                 (3571) திருவாய்மொழி (9-2-4)

     என்று நம்மாழ்வாரால் பாடப்பட்ட இத்திவ்ய தேசம்
ஸ்ரீவைகுண்டத்திலிருந்து கிழக்கே சுமார் ஒரு மைல் தொலைவில் உள்ளது.
ஸ்ரீவைகுண்டத்திலிருந்து நடந்தே செல்லலாம். வரகுண மங்கையென்று
சொன்னால் யாருக்கும் தெரியாது. நத்தம் என்று சொன்னால் எல்லோரும்
அடையாளம் காட்டிடுவர். தற்போது நத்தம் என்னும் பெயரே பிரதானமாக
உள்ளது.

வரலாறு

     இத்தலத்தைப் பற்றியும் பிரம்மாண்ட புராணத்தில்தான்
சொல்லப்பட்டுள்ளது. முன்னொரு காலத்தில் ரேவா நதிக்கரையில் புண்ணிய
கோசம் என்ற அக்கிரஹாரத்தில் வாழ்ந்து வந்த “வேதவித்” என்னும்
பிராமணன் ஒருவன் மாதா. பிதா. குரு ஆகிய மூவருக்கும் செய்ய வேண்டிய
கடன்களைச் செய்து முடித்து திருமாலைக் குறித்து தவமியற்றுவதில் மிகச்
சிறந்த மந்திரங்களில் ஒன்றாகிய “ஆஸணதை” என்னும் மந்திரத்தை ஜெபித்து
தவமியற்ற எண்ணிக்கொண்டிருந்தான். அப்போது திருமாலே ஒரு கிழப்
பிராமணன் வேடம் பூண்டு அவனிடம் வந்து “சக்யம், மகேந்திரம் என்னும்
இருமலைகட்கு இடைப்பட்டு விளங்கும் வரகுணமங்கை என்னும் பதியில்
சென்று தவமியற்றுமாறும், அதுவே “ஆஸணதை” என்னும் மந்திரா
ஜபத்திற்குச் சிறந்த இடமென்று கூற வேதவித் என்னும் பிராமணன் உடனே
இவ்விடம் வந்து ஆகார நித்திரையின்றி கடுந்தவஞ்செய்து இறுதியில்
திருமாலின் சேவையைப் பெற்று பரமபதம் பெற்றான். ஆஸணத் மந்திரத்தை
ஜெபித்து இறைவன் காட்சி தந்ததால் விசயாசனர் என்னும் திருநாமம்
இப்பெருமானுக்கு உண்டாயிற்று.