பக்கம் எண் :

502

86. தென்திருப்பேரை

     “நகரமும் நாடும் பிறவும் தேர்வேன்
          நாணெனக் கில்லை என் தோழிமீர்காள்
     சிகரமணி நெடுமாட நீடு
          தென் திருப்பேரையில் வீற்றிருந்த
     மகர நெடுங்குழைக் காதன் மாயன்
          நூற்றுவரை அன்று மங்க நூற்ற
     நிகரில் முகில் வண்ணன் நேமியான் என்
          நெஞ்சம் கவர்ந்து எனை யூழியானே
                 (3368) திருவாய்மொழி 7-2-10

     என்று நம்மாழ்வாரின் பாடல் பெற்ற இத்திருத்தலம் திருநகரியிலிருந்து
திருச்செந்தூர் செல்லும் சாலையில் சுமார் 3 மைல் தொலைவில் தென்கிழக்கு
திசையில் உள்ளது.

     திருக்கோளூரில் இருந்தும் இவ்வூருக்கு பேருந்து வசதியுள்ளது.
திருக்கோளூரிலிருந்து நடந்தும் வரலாம்.

வரலாறு.

     பிரமாண்ட புராணமே இதைப் பற்றியும் தெரிவிக்கிறது. ஒரு சமயம்
ஸ்ரீமந் நாராயணன் திருமகளை விடுத்து பூமாதேவியிடம் அதிக ஈடுபாடு
கொண்டு பூவுலகில் பூமாதேவியிடம் லயித்திருந்த காலையில் திருமகளாகிய
இலக்குமி தன்னைக் காண வந்த துர்வாச முனிவரிடம், தனது தனித்த
நிலைமையைத் தெரிவித்து பூமாதேவியின் நிறமும் அழகும் தனக்கு
வரவேண்டுமென்று வேண்டினாள்.

     துர்வாசர் பூமிப்பிராட்டியின் இருப்பிடம் அடைந்தார். துர்வாசர்
வந்திருப்பதை அறிந்தும் அறியாது போல் இருந்த பூமாதேவி, எம்பெருமானின்
மடியைவிட்டு எழுந்திராமல் இருக்கவே, கடுஞ்சினங்கொண்ட துர்வாசர்
பூமாதேவியை நோக்கி “நீ இலக்குமியின் உருவத்தை பெறுவாய்” என்று சபிக்க
அதுகேட்ட பூமாதேவி தனது குற்றத்தை உணர்ந்து மிகவும் வருந்திய
நிலையில், தனது குற்றத்தை பொறுக்குமாறு வேண்டிக்கொண்டு எனது “கரிய
நிறம் பெறும் காலம்” எப்போது வருமென்று கேட்க, தாமிரபரணியின் தென்
கரையில் உள்ள கரிபதம் என்ற சேத்திரத்தில் நதியில் நீராடி தவம் புரிந்தால்
உனது பழைய உருவம் சித்திக்கும் என்று கூறியருளினார்.