பக்கம் எண் :

625

102. திருவடமதுரை (மதுரா)
(பிருந்தாவனமும், கோவர்த்தனமும் அடங்கியது.)

     மாயனை மன்னு வடமதுரை மைந்தனை
          தூய பெருநீர் யமுனைத் துறைவனை
     ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை
          தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை
     தூயோமாய் வந்துநாம் தூமலர்த் தூவித் தொழுது
          வாயினால் பாடி மனதினால் சிந்திக்க
     போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
          தீயினுள் தூசாகும் செப்பேலோ ரெம்பாவாய் (478)
                                      திருப்பாவை 5

     தனது அவதாரத்தினால் தன் தாயாருக்கு மேன்மையளித்த யமுனைத்
துறைவனான வடமதுரையில் பிறந்த மாயனை தூய உள்ளத்தினராய் வந்து
தூமலர் தூவித் தொழுது வாயினால் பாடி மனதினால் சிந்தித்தால் நாம்
செய்திருக்கிற பிழையினால் நம்மைச் சார்ந்த பாவமும், நம்மிடம் புகவேண்டும்
என்று காத்திருக்கும் பாவங்களும் தீயிலிட்ட தூசு போலாகிவிடும் என்று
ஸ்ரீஆண்டாளால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இத்தலம் வடநாட்டில் மதுரா
என்றழைக்கப்படும் கிருஷ்ணபூமியாகும். ராமஜென்ம பூமியைப் போலவே
இத்தலமும் பெருஞ்சிறப்புற்று பக்திலயத்தில் திளைத்துக் கொண்டிருக்கிறது.

     டெல்லியிலிருந்து ஆக்ரா வரும் வழியில் ரயில் மார்க்கத்தில் மதுரா
ஸ்டேஷன் ஒரு ஜங்ஷனாகும். இங்கிருந்து 7 மைல் தூரத்தில் பிருந்தாவனம்
உள்ளது. இதே தொலைவில் கோவர்த்தனம் எனப்படும் கோவர்த்தன கிரியும்
உள்ளது.

     கிருஷ்ண ஜென்ம பூமியாகிய மதுரா, கிருஷ்ணன் ஆடியும் பாடியும்
ஆநிரை மேய்த்தும் கன்றுகள் பின்திரிந்தும் களித்திருந்த பிருந்தாவனம்,
ஆநிரைகளையும் கோபால கோபியரையும் காக்க குன்றைக் குடையாக
எடுத்துப் பிடித்த கோவர்த்தன கிரி என்னும் கோவர்த்தனம் இம்மூன்றும்
சேர்த்தே மங்களாசாசனமாகக் கொள்வர். இந்த மூன்று இடங்களும் ஒரு
முக்கோண வடிவில் அமைந்துள்ளது. ஆழ்வார்கள் பிருந்தாவனத்திற்கு
கோவர்த்தனத்திற்கும் தனித் தனி பதிகங்களால் மங்களாசாசனம்
செய்துள்ளனர்.