பக்கம் எண் :

652

106. திருவேங்கடம் (திருப்பதி)

     செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
          நெடியானே வேங்கடவா நின்கோவிலின் வாசல்
     அடியாரும் வானவரு மரம்பையரும் கிடந்தியங்கும்
          படியாய்க் கிடந்துநின் பவளவாய் காண்பேனே
                      685 பெருமாள் திருமொழி 4-7-9

     திருப்பதி, திருமலை, ஏழுமலையோன் ஆதிவராக சேத்திரம் என்று
இன்றும் பல பெயர்களால் போற்றப்படும் திருவேங்கடத்து வாசம் செய்யும்
ஸ்ரீனிவாசனே, எத்தனையோ பிறவிகளாக தீர்க்கவியலாவாறு தொடர்ந்துவரும்
பாவங்களைத் தீர்ப்பவன். அதனால்தான் வல்வினைகள் தீர்க்கும் திருமால்
என்றார். பாவங்களைப் போக்க வல்ல இப்பேர்ப்பட்ட நின் கோவிலை
நாடிவரக்கூடிய அடியவர்கள், தேவாதி தேவர்கள், அரம்பையர்கள் ஆகியோர்
மதித்துவரக்கூடிய ஒரு படிக்கல்லாக நின் கோவிலின் வாசலில்
கிடக்கமாட்டேனா, அவ்வாறுதான் கிடப்பேன் அவ்விதமே கிடந்து நின்
பவளவாய் கண்டுகொண்டே இருப்பேன் என்று குலசேகராழ்வாரால்
பாசுரஞ்சூட்டப்பட்ட இத்தலம் இன்றைய கலியுகத்தில்
உலகப்பிரசித்திபெற்றதாகத் திகழ்கிறது.

     எந்நேரமும் கூட்டம், பக்தர்களின் திருக்கூட்டம் பாடியாடும்
பாகவதர்களின் கூட்டம், கோவிந்தா வென்னும் நாமம் ஒலித்துக்
கொண்டேயிருக்க பக்தர்கள் வருவதும் போவதுமான இடையறாத நிகழ்ச்சியாகி
எந்நேரமும் பக்தியில் திளைத்துக் கொண்டிருக்கும் மலை.

     தமிழகத்தின் வடவெல்லையாகத் திகழும் வேங்கடம் இன்று
ஆந்திராவிற்குள் இருக்கிறது.
 

     “வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத்
          தமிழ்கூறு நல்லுலகம்”

     என்று பண்டை தமிழ்நாட்டிற்கு எல்லையாகத் திகழ்ந்து தமிழ்மணம்
பரப்பிய வேங்கடம் ஆங்கிலேயரை விரட்டியடித்து சுதந்திர இந்தியா
மாகாணங்களாக உருப்பெற்ற போது ஆந்திராவிற்குள் நுழைந்து விட்டது.
சென்னையைத் தமிழ்நாட்டுக்கு கொடுத்துவிட்டு வேங்கடத்தை ஆந்திராவுக்கு
தந்துவிட்டனர். நிலத்தால் பிரிந்து சென்றாலும் அடியார்கள் நினைவில்
நீங்காது இடம் பெற்றுவிட்டது திருப்பதி.