பக்கம் எண் :

66

5 திரு அன்பில்

     நாகத் தணைக்குடந்தை வெஃகா திருவெவ்வுள்
          நாகத் தணையரங்கம் பேர் அன்பில் - நாகத்
     தணைப் பாற் கடல் கிடக்கு மாதி நெடுமால்
          அணைப் பார் கருத்தனாவன்
                   (2417) - நான்முகன் திருவந்தாதி - 36

     குடந்தை யென்னும் கும்பகோணத்திலும் வெஃகா வென்னும்
காஞ்சிபுரத்திலும், திருஎவ்வுள் என்ற திருவள்ளூரிலும், அரங்கம் என்ற
ஸ்ரீரங்கத்திலும், பேர் என்ற திருப்பேர் நகரிலும், அன்பிலாகிய, இந்த
திருவன்பில் தலத்திலும், நாகத்தில் பள்ளி கொண்டுள்ள பெருமாள் வேறு
யாருமல்ல அவன்தான் திருப்பாற் கடலில் பள்ளி கொண்டுள்ள ஆதி
நெடுமாலாகும். அவன் தன்னை ஆராதிப்பவர்களை அணைத்துக்
காப்பவனுமாவான், என்று திருமழிசை ஆழ்வாரால் பாடப்பட்ட இத்தலம்
ஸ்ரீரங்கத்திற்கு அருகாமையிலேயே அமைந்துள்ளது.

     டோல்கேட்டில் இருந்தும், திருச்சியிலிருந்தும், லால்குடியிலிருந்தும்
செல்லலாம். திருப்பேர் நகர் என்று அழைக்கப்படும் (அப்பக் குடத்தான்)
சன்னிதியிலிருந்து கொள்ளிட நதிக் கரையை கடந்து நடந்தே வந்தால் சுமார்
2 கி.மீ. தூரம் தான் ஆகும்.

வரலாறு

     மற்ற ஸ்தலங்கட்கு உள்ளதைப் போன்று மிக விரிவாக ஸ்தலவரலாறோ
வரலாற்று நூலோ, தமிழ் இலக்கியத்தின் ஆதாரங்களோ இத்தலத்திற்கு
கிட்டவில்லை. இத்தலத்தைப் பற்றிய விரிவான ஆராய்ச்சியில் இது காறும்
யாரும் ஈடுபடவில்லை. புராண நூல்கள் இத்தலத்தைப் பிரம்மபுரி என்று
குறிப்பிடுகின்றன.

     பிரம்ம தேவனுக்கும், சிவபெருமானுக்கும் ஐந்து தலைகள் இருந்தன.
ஒரு சமயம் நிஷ்டையில் அமர்ந்திருந்த பார்வதி தேவி சற்றே விழித்து
நோக்கும் போது அவ்வழியாகச் சென்று கொண்டிருந்த பிரம்மனை தனது
பர்த்தாவென்று எண்ணி பாதங்களைக் கழுவி பணிவிடை செய்ய, ஒரு
மரியாதையின் பொருட்டு உமையவள் இவ்வாறு செய்கின்றாள் என்று
பிரம்மதேவன் அதை ஏற்றுக் கொண்டிருக்கும் போது தற்செயலாக வந்த
சிவபெருமான், இதைக் கண்டு சினந்து இருவருக்கும் 5 தலைகள் இருப்பதால்
தானே இப்பிரச்சனை