7. திருநள்ளாறும், திருஆலவாயும் (வினாஉரை) - நட்டபாடை
 
65. பாடக மெல் அடிப் பாவையோடும், படு பிணக்காடு இடம் பற்றி
                                                             நின்று,
நாடகம் ஆடும், நள்ளாறு உடைய, நம்பெருமான்! இது என்கொல்
                                                             சொல்லாய்
சூடக முன்கை மடந்தைமார்கள் துணைவரொடும் தொழுது ஏத்தி
                                                             வாழ்த்த,
ஆடகமாடம் நெருங்கு கூடல் ஆலவாயின் கண் அமர்ந்த ஆறே?
உரை
   
66. திங்கள் அம்போதும் செழும்புனலும் செஞ்சடைமாட்டு அயல்
                                                             வைத்து உகந்து,
நம் கண் மகிழும், நள்ளாறு உடைய, நம்பெருமான்! இது
                                                             என்கொல் சொல்லாய்
பொங்கு இளமென் முலையார்களோடும் புனமயில் ஆட, நிலா
                                                             முளைக்கும்
அம் களகச் சுதை மாடக் கூடல் ஆலவாயின்கண் அமர்ந்த ஆறே?
உரை
   
67. தண் நறுமத்தமும் கூவிளமும் வெண் தலைமாலையும் தாங்கி,
                                                             யார்க்கும்
நண்ணல் அரிய, நள்ளாறு உடைய, நம்பெருமான்! இது என்கொல்
                                                             சொல்லாய்
புண்ணியவாணரும் மா தவரும் புகுந்து உடன் ஏத்த, புனையிழையார்
அண்ணலின் பாடல் எடுக்கும் கூடல் ஆலவாயின்கண் அமர்ந்த
                                                             ஆறே?
உரை
   
68. பூவினில் வாசம், புனலில் பொற்பு, புது விரைச்சாந்தினில்
                                                             நாற்றத்தோடு,
நாவினில் பாடல், நள்ளாறு உடைய, நம்பெருமான்! இது
                                                             என்கொல் சொல்லாய்
தேவர்கள், தானவர், சித்தர், விச்சாதரர், கணத்தோடும் சிறந்து
                                                             பொங்கி,
ஆவினில் ஐந்து உகந்து ஆட்டும் கூடல் ஆலவாயின் கண்
                                                             அமர்ந்த ஆறே?
உரை
   
69. செம்பொன் செய் மாலையும், வாசிகையும், திருந்து புகையும்,
                                                             அவியும், பாட்டும்,
நம்பும் பெருமை, நள்ளாறு உடைய, நம்பெருமான்! இது
                                                             என்கொல் சொல்லாய்
உம்பரும், நாகர் உலகம் தானும், ஒலி கடல் சூழ்ந்த உலகத்தோரும்,
அம்புதம் நால்களால் நீடும் கூடல் ஆலவாயின் கண் அமர்ந்த ஆறே?
உரை
   
70. பாகமும் தேவியை வைத்துக்கொண்டு, பை விரி துத்திப் பரிய
                                                             பேழ்வாய்
நாகமும் பூண்ட, நள்ளாறு உடைய, நம்பெருமான்! இது என்கொல்
                                                             சொல்லாய்
போகமும் நின்னை மனத்துவைத்துப் புண்ணியர் நண்ணும் புணர்வு
                                                             பூண்ட
ஆகம் உடையவர் சேரும் கூடல் ஆலவாயின்கண் அமர்ந்த ஆறே?
உரை
   
71. கோவண ஆடையும், நீற்றுப்பூச்சும், கொடுமழு ஏந்தலும்,
                                                             செஞ்சடையும்,
நாவணப் பாட்டும், நள்ளாறு உடைய, நம்பெருமான்! இது
                                                             என்கொல் சொல்லாய்
பூவண மேனி இளைய மாதர், பொன்னும் மணியும் கொழித்து எடுத்து,
ஆவண வீதியில் ஆடும் கூடல் ஆலவாயின்கண் அமர்ந்த ஆறே?
உரை
   
72. இலங்கை இராவணன் வெற்பு எடுக்க, எழில் விரல் ஊன்றி,
                                                             இசை விரும்பி,
நலம் கொளச் சேர்ந்த, நள்ளாறு உடைய, நம்பெருமான்! இது
                                                             என்கொல் சொல்லாய்
புலன்களைச் செற்று, பொறியை நீக்கி, புந்தியிலும் நினைச்
                                                             சிந்தைசெய்யும்
அலங்கல் நல்லார்கள் அமரும் கூடல் ஆலவாயின்கண் அமர்ந்த
                                                             ஆறே?
உரை
   
73. பணி உடை மாலும் மலரினோனும், பன்றியும் வென்றிப் பறவை
                                                             ஆயும்,
நணுகல் அரிய, நள்ளாறு உடைய, நம்பெருமான்! இது
                                                             என்கொல் சொல்லாய்
மணி ஒலி சங்கு ஒலியோடு மற்றை மா முரசின் ஒலி என்றும் ஓவாது
அணி கிளர் வேந்தர் புகுதும் கூடல் ஆலவாயின்கண் அமர்ந்த ஆறே?
உரை
   
74. தடுக்கு உடைக் கையரும் சாக்கியரும், சாதியின் நீங்கிய
                                                             அத் தவத்தர்
நடுக்கு உற நின்ற, நள்ளாறு உடைய, நம்பெருமான்! இது
                                                             என்கொல் சொல்லாய்
எடுக்கும் விழவும் நன்நாள் விழவும் இரும் பலி இன்பினோடு
                                                             எத்திசையும்
அடுக்கும் பெருமை சேர் மாடக் கூடல் ஆலவாயின்கண் அமர்ந்த
                                                             ஆறே?
உரை
   
75. அன்பு உடையானை, அரனை, "கூடல் ஆலவாய் மேவியது
                                                             என்கொல்?" என்று,
நன்பொனை, நாதனை, நள்ளாற்றானை, நயம் பெறப் போற்றி,
                                                             நலம் குலாவும்
பொன் புடை சூழ்தரு மாடக் காழிப் பூசுரன்-ஞானசம்பந்தன்-சொன்ன
இன்பு உடைப் பாடல்கள்பத்தும் வல்லார், இமையவர் ஏத்த
                                                             இருப்பர் தாமே.
உரை