9. திருவேணுபுரம் - நட்டபாடை
 
87. வண்டு ஆர் குழல் அரிவையொடு பிரியா வகை பாகம்
பெண்தான் மிக ஆனான், பிறைச் சென்னிப் பெருமான், ஊர்
தண் தாமரை மலராள் உறை தவள நெடுமாடம்
விண் தாங்குவ போலும் மிகு வேணுபுரம் அதுவே.
உரை
   
88. படைப்பு, நிலை, இறுதி, பயன், பருமையொடு, நேர்மை,
கிடைப் பல்கணம் உடையான், கிறி தப்படையான், ஊர்
புடைப் பாளையின் கமுகினொடு புன்னை மலர் நாற்றம்
விடைத்தே வரு தென்றல் மிகு வேணுபுரம் அதுவே.
உரை
   
89. கடம் தாங்கிய கரியை அவள் வெருவ உரி போர்த்து,
படம் தாங்கிய அரவக்குழைப் பரமேட்டிதன் பழ ஊர்
நடம் தாங்கிய நடையார், நல பவளத்துவர் வாய், மேல்
விடம் தாங்கிய கண்ணார், பயில் வேணுபுரம் அதுவே.
உரை
   
90. தக்கன்தன சிரம் ஒன்றினை அரிவித்து, அவன் தனக்கு
மிக்க வரம் அருள் செய்த எம் விண்ணோர் பெருமான் ஊர்
பக்கம் பலமயில் ஆடிட, மேகம் முழவு அதிர,
மிக்க மது வண்டு ஆர் பொழில் வேணு புரம் அதுவே.
உரை
   
91. நானாவித உருவான், நமை ஆள்வான், நணுகாதார்
வான் ஆர் திரி புரம் மூன்று எரியுண்ணச் சிலை தொட்டான்,
தேர் ஆர்ந்து எழு கதலிக்கனி உண்பான் திகழ் மந்தி
மேல் நோக்கி நின்று இரங்கும் பொழில் வேணுபுரம் அதுவே.
உரை
   
92. விண்ணோர்களும் மண்ணோர்களும் வெருவி மிக அஞ்ச,
கண் ஆர் சலம் மூடிக் கடல் ஓங்க, உயர்ந்தான் ஊர்
தண் ஆர் நறுங்கமலம் மலர் சாய, இள வாளை
விண் ஆர் குதிகொள்ளும் வியன் வேணுபுரம் அதுவே.
உரை
   
93. மலையான் மகள் அஞ்ச, வரை எடுத்த வலி அரக்கன்
தலை தோள் அவை நெரியச் சரண் உகிர் வைத்தவன் தன் ஊர்
கலை ஆறொடு சுருதித் தொகை கற்றோர் மிகு கூட்டம்
விலை ஆயின சொல்-தேர்தரு வேணுபுரம் அதுவே.
உரை
   
94. வயம் உண்ட அமாலும் அடி காணாது அலமாக்கும்,
பயன் ஆகிய பிரமன் படுதலை ஏந்திய பரன் ஊர்
கயம் மேவிய சங்கம் தரு கழி விட்டு, உயர் செந்நெல்
வியல் மேவி, வந்து உறங்கும் பொழில் வேணுபுரம் அதுவே.
உரை
   
95. மாசு ஏறிய உடலார் அமண்குழுக்களொடு தேரர்,
தேசு ஏறிய பாதம் வணங்காமைத் தெரியான் ஊர்
தூசு ஏறிய அல்குல் துடி இடையார், துணைமுலையார்,
வீசு ஏறிய புருவத்தவர், வேணுபுரம் அதுவே.
உரை
   
96. வேதத்து ஒலியானும் மிகு வேணுபுரம் தன்னைப்
பாதத்தினில் மனம் வைத்து எழு பந்தன்தன பாடல்,
ஏதத்தினை இல்லா இவை பத்தும், இசை வல்லார்
கேதத்தினை இல்லார், சிவகெதியைப் பெறுவாரே.
உரை