15. திருநெய்த்தானம் - நட்டபாடை
 
152. மை ஆடிய கண்டன், மலை மகள் பாகம் அது உடையான்,
கை ஆடிய கேடு இல் கரி உரி மூடிய ஒருவன்,
செய் ஆடிய குவளை மலர் நயனத்தவளோடும்
நெய் ஆடிய பெருமான், இடம் நெய்த்தானம் எனீரே!
உரை
   
153. பறையும், பழிபாவம்; படு துயரம்பல தீரும்;
பிறையும், புனல், அரவும், படு சடை எம்பெருமான் ஊர்
அறையும், புனல் வரு காவிரி அலை சேர் வடகரை மேல்,
நிறையும் புனை மடவார் பயில் நெய்த்தானம் எனீரே!
உரை
   
154. பேய் ஆயின பாட, பெரு நடம் ஆடிய பெருமான்,
வேய் ஆயின தோளிக்கு ஒருபாகம் மிக உடையான்,
தாய் ஆகிய உலகங்களை நிலைபேறுசெய் தலைவன்,
நே ஆடிய பெருமான், இடம் நெய்த்தானம் எனீரே!
உரை
   
155. சுடு நீறு அணி அண்ணல், சுடர் சூலம் அனல் ஏந்தி,
நடு நள் இருள் நடம் ஆடிய நம்பன், உறைவு இடம் ஆம்
கடு வாள் இள அரவு ஆடு உமிழ் கடல் நஞ்சம் அது உண்டான்,
நெடுவாளைகள் குதிகொள் உயர் நெய்த்தானம் எனீரே!
உரை
   
156. நுகர் ஆரமொடு ஏலம் மணி செம்பொன் நுரை உந்தி,
பகரா வருபுனல் காவிரி பரவிப் பணிந்து ஏத்தும்,
நிகரால் மணல் இடு தண் கரை நிகழ்வு ஆய, நெய்த்தான-
நகரான் அடி ஏத்த, நமை நடலை அடையாவே.
உரை
   
157. விடை ஆர் கொடி உடைய அணல், வீந்தார் வெளை எலும்பும்
உடையார், நறுமாலை சடை உடையார் அவர், மேய,
புடையே புனல் பாயும், வயல் பொழில் சூழ்ந்த, நெய்த்தானம்
அடையாதவர் என்றும் அமருலகம் அடையாரே.
உரை
   
158. நிழல் ஆர் வயல் கமழ் சோலைகள் நிறைகின்ற நெய்த்தானத்து
அழல் ஆனவன், அனல் அங்கையில் ஏந்தி, அழகு ஆய
கழலான் அடி நாளும் கழலாதே, விடல் இன்றித்
தொழலார் அவர் நாளும் துயர் இன்றித் தொழுவாரே.
உரை
   
159. அறை ஆர் கடல் இலங்கைக்கு இறை அணி சேர் கயிலாயம்
இறை ஆர முன் எடுத்தான், இருபது தோள் இற ஊன்றி,
நிறை ஆர் புனல் நெய்த்தானன் நன் நிகழ் சேவடி பரவ,
கறை ஆர் கதிர் வாள் ஈந்தவர் கழல் ஏத்துதல் கதியே.
உரை
   
160. கோலம் முடி நெடு மாலொடு, கொய் தாமரை யானும்,
சீலம் அறிவு அரிது ஆய் ஒளி திகழ்வு ஆய நெய்த்தானம்,
காலம் பெற, மலர் நீர் அவை தூவித் தொழுது ஏத்தும்
ஞாலம் புகழ் அடியார் உடல் உறு நோய் நலியாவே.
உரை
   
161. மத்தம் மலி சித்தத்து இறை மதி இல்லவர் சமணர்,
புத்தர் அவர், சொன்ன மொழி பொருளா நினையேன் மின்!
நித்தம் பயில் நிமலன் உறை நெய்த்தானம் அது ஏத்தும்
சித்தம் உடை அடியார் உடல் செறு நோய் அடையாவே.
உரை
   
162. தலம் மல்கிய புனல் காழியுள் தமிழ் ஞானசம்பந்தன்
நிலம் மல்கிய புகழால் மிகும் நெய்த்தானனை நிகர் இல்
பலம் மல்கிய பாடல் இவை பத்தும் மிக வல்லார்,
சில மல்கிய செல்வன் அடி சேர்வர், சிவ கதியே.
உரை