16. திருப்புள்ளமங்கைத் திருஆலந்துறை - நட்டபாடை
 
163. பால் உந்து உறு திரள் ஆயின பரமன், பிரமன் தான்
போலும் திறலவர் வாழ்தரு பொழில் சூழ் புள மங்கை,
காலன் திறல் அறச் சாடிய கடவுள் இடம் கருதில்,
ஆலந்துறை தொழுவார் தமை அடையா, வினை தானே.
உரை
   
164. மலையான் மகள் கணவன், மலி கடல் சூழ்தரு தன்மைப்
புலை ஆயின களைவான், இடம் பொழில் சூழ் புளமங்கை,
கலையால் மலி மறையோர் அவர் கருதித் தொழுது ஏத்த,
அலை ஆர் புனல் வரு காவிரி ஆலந்துறை அதுவே.
உரை
   
165. கறை ஆர் மிடறு உடையான், கமழ் கொன்றைச் சடை முடி மேல்
பொறை ஆர் தரு கங்கைப்புனல் உடையான், புளமங்கைச்
சிறை ஆர்தரு களி வண்டு அறை பொழில் சூழ் திரு ஆலந்
துறையான் அவன், நறை ஆர் கழல் தொழுமின், துதி செய்தே!
உரை
   
166. தணி ஆர் மதி அரவின்னொடு வைத்தான் இடம் மொய்த்து, எம்
பணி ஆயவன் அடியார் தொழுது ஏத்தும் புளமங்கை,
மணி ஆர்தரு கனகம் அவை வயிரத்திரளோடும்
அணி ஆர் மணல் அணை காவிரி ஆலந்துறை அதுவே.
உரை
   
167. மெய்த் தன் உறும் வினை தீர் வகை தொழுமின்! செழு மலரின்
கொத்தின்னொடு சந்து ஆர் அகில் கொணர் காவிரிக் கரை மேல்,
பொத்தின் இடை ஆந்தை பல பாடும் புளமங்கை
அத்தன், நமை ஆள்வான், இடம் ஆலந்துறை அதுவே.
உரை
   
168. மன் ஆனவன், உலகிற்கு ஒரு மழை ஆனவன், பிழை இல்
பொன் ஆனவன், முதல் ஆனவன், பொழில் சூழ் புளமங்கை
என் ஆனவன், இசை ஆனவன், இள ஞாயிறின் சோதி
அன்னான் அவன், உறையும் இடம் ஆலந்துறை அதுவே.
உரை
   
169. முடி ஆர் தரு சடைமேல் முளை இள வெண்மதி சூடி,
பொடி ஆடிய திருமேனியர், பொழில் சூழ் புளமங்கை,
கடி ஆர் மலர் புனல் கொண்டு தன் கழலே தொழுது ஏத்தும்
அடியார் தமக்கு இனியான், இடம் ஆலந்துறை அதுவே.
உரை
   
170. இலங்கை மனன் முடி தோள் இற, எழில் ஆர் திருவிரலால்
விலங்கல் இடை அடர்த்தான் இடம் வேதம் பயின்று ஏத்தி,
புலன்கள் தமை வென்றார் புகழவர் வாழ் புளமங்கை,
அலங்கல் மலி சடையான் இடம் ஆலந்துறை அதுவே.
உரை
   
171. செறி ஆர்தரு வெள்ளைத் திரு நீற்றின் திருமுண்டப்
பொறி ஆர்தரு புரிநூல் வரை மார்பன் புளமங்கை,
வெறி ஆர்தரு கமலத்து அயன் மாலும், தனை நாடி
அறியா வகை நின்றான் இடம் ஆலந்துறை அதுவே.
உரை
   
172. நீதி அறியாத அமண்கையரொடு மண்டைப்
போதியவர் ஓது உரை கொள்ளார் புளமங்கை
ஆதி அவர் கோயில் திரு ஆலந்துறை தொழுமின்!
சாதி மிகு வானோர் தொழு தன்மை பெறல் ஆமே.
உரை
   
173. பொந்தின் இடைத் தேன் ஊறிய பொழில் சூழ் புளமங்கை
அம் தண்புனல் வரு காவிரி ஆலந்துறை அரனைக்
கந்தம் மலி கமழ் காழியுள் கலை ஞானசம்பந்தன்
சந்தம் மலி பாடல் சொலி, ஆட, தவம் ஆமே.
உரை