17. திருஇடும்பாவனம் - நட்டபாடை
 
174. மனம் ஆர்தரு மடவாரொடு மகிழ் மைந்தர்கள் மலர் தூய்,
தனம் ஆர்தரு, சங்கக் கடல் வங்கத்திரள் உந்தி,
சினம் ஆர்தரு திறல் வாள் எயிற்று அரக்கன் மிகு, குன்றில்
இன மா தவர் இறைவர்க்கு இடம் இடும்பாவனம் இதுவே.
உரை
   
175. மலையார் தரு மடவாள் ஒரு பாகம் மகிழ்வு எய்தி,
நிலை ஆர்தரு நிமலன் வலி நிலவும் புகழ் ஒளி சேர்,
கலை ஆர்தரு புலவோர் அவர் காவல் மிகு, குன்றில்
இலை ஆர்தரு பொழில் சூழ்வரும் இடும்பாவனம் இதுவே.
உரை
   
176. சீலம் மிகு சித்தத்தவர் சிந்தித்து எழும் எந்தை,
ஞாலம் மிகு கடல் சூழ் தரும் உலகத்தவர் நலம் ஆர்,
கோலம் மிகு மலர் மென் முலை மடவார் மிகு, குன்றில்
ஏலம் கமழ் பொழில் சூழ் தரும் இடும்பாவனம் இதுவே.
உரை
   
177. பொழில் ஆர்தரு, குலை வாழைகள் எழில் ஆர் திகழ் போழ்தில்,
தொழிலால் மிகு தொண்டர் அவர் தொழுது ஆடிய முன்றில்,
குழல் ஆர்தரு மலர் மென் முலை மடவார் மிகு, குன்றில்
எழில் ஆர்தரும் இறைவர்க்கு இடம் இடும்பாவனம் இதுவே.
உரை
   
178. “பந்து ஆர் விரல் உமையாள் ஒரு பங்கா! கங்கை, முடிமேல்
செந்தாமரை மலர் மல்கிய செழு நீர் வயல் கரைமேல்,
கொந்து ஆர் மலர்ப்புன்னை, மகிழ், குரவம், கமழ் குன்றில்
எந்தாய்!” என, இருந்தான் இடம் இடும்பாவனம் இதுவே.
உரை
   
179. நெறி நீர்மையர், நீள் வானவர், நினையும் நினைவு ஆகி,
அறி நீர்மையில் எய்தும் அவர்க்கு அறியும் அறிவு அருளி,
குறி நீர்மையர் குணம் ஆர்தரு மணம் ஆர்தரு குன்றில்,
எறி நீர் வயல் புடை சூழ்தரும் இடும்பாவனம் இதுவே.
உரை
   
180. நீறு ஏறிய திருமேனியர், நிலவும் உலகு எல்லாம்
பாறு ஏறிய படு வெண் தலை கையில் பலி வாங்கா,
கூறு ஏறிய மடவாள் ஒரு பாகம் மகிழ்வு எய்தி,
ஏறு ஏறிய இறைவர்க்கு இடம் இடும்பாவனம் இதுவே.
உரை
   
181. தேர் ஆர்தரு திகழ் வாள் எயிற்று அரக்கன், சிவன் மலையை
ஓராது எடுத்து ஆர்த்தான், முடி ஒருபஃது அவை நெரித்து,
கூர் ஆர்தரு கொலைவாளொடு குணம் நாமமும் கொடுத்த,
ஏர் ஆர்தரும், இறைவர்க்கு இடம் இடும்பாவனம் இதுவே.
உரை
   
182. பொருள் ஆர்தரும் மறையோர் புகழ் விருத்தர் பொலி மலி சீர்த்
தெருள் ஆர்தரு சிந்தையொடு சந்தம் மலர் பல தூய்,
மருள் ஆர்தரு மாயன் அயன் காணார் மயல் எய்த,
இருள் ஆர்தரு கண்டர்க்கு இடம் இடும்பாவனம் இதுவே.
உரை
   
183. தடுக்கை உடன் இடுக்கித் தலை பறித்துச் சமண் நடப்பார்,
உடுக்கைபல துவர்க்கூறைகள் உடம்பு இட்டு உழல்வாரும்,
மடுக்கள் மலர் வயல் சேர் செந்நெல் மலி நீர் மலர்க் கரைமேல்
இடுக் கண் பல களைவான் இடம் இடும்பாவனம் இதுவே.
உரை
   
184. கொடி ஆர் நெடுமாடக் குன்றளூரின் கரைக் கோல
இடி ஆர் கடல் அடி வீழ்தரும் இடும்பாவனத்து இறையை,
அடி ஆயும் அந்தணர் காழியுள் அணி ஞானசம்பந்தன்
படியால் சொன்ன பாடல் சொல, பறையும், வினைதானே.
உரை