25. திருச்செம்பொன்பள்ளி - தக்கராகம்
 
261. மரு ஆர் குழலிமாது ஓர் பாகம் ஆய்,
திரு ஆர் செம்பொன் பள்ளி மேவிய,
கரு ஆர் கண்டத்து, ஈசன் கழல்களை
மருவாதவர் மேல் மன்னும், பாவமே.
உரை
   
262. வார் ஆர் கொங்கை மாது ஓர்பாகம் ஆய்,
சீர் ஆர் செம்பொன் பள்ளி மேவிய,
ஏர் ஆர் புரிபுன்சடை, எம் ஈசனைச்
சேராதவர் மேல் சேரும், வினைகளே.
உரை
   
263. வரை ஆர் சந்தோடு அகிலும் வரு பொன்னித்
திரை ஆர் செம்பொன் பள்ளி மேவிய,
நரை ஆர் விடை ஒன்று ஊரும், நம்பனை
உரையாதவர் மேல் ஒழியா, ஊனமே.
உரை
   
264. மழுவாள் ஏந்தி, மாது ஓர் பாகம் ஆய்,
செழு ஆர் செம்பொன் பள்ளி மேவிய,
எழில் ஆர் புரிபுன்சடை, எம் இறைவனைத்
தொழுவார் தம்மேல் துயரம் இல்லையே.
உரை
   
265. மலையான் மகளோடு உடன் ஆய் மதில் எய்த
சிலை ஆர் செம்பொன் பள்ளியானையே
இலை ஆர் மலர் கொண்டு, எல்லி நண்பகல்,
நிலையா வணங்க, நில்லா, வினைகளே.
உரை
   
266. அறை ஆர் புனலோடு அகிலும் வரு பொன்னிச்
சிறை ஆர் செம்பொன் பள்ளி மேவிய,
கறை ஆர் கண்டத்து, ஈசன் கழல்களை
நிறையால் வணங்க, நில்லா, வினைகளே.
உரை
   
267. பை ஆர் அரவு ஏர் அல்குலாளொடும்
செய் ஆர் செம்பொன் பள்ளி மேவிய,
கை ஆர் சூலம் ஏந்து, கடவுளை
மெய்யால் வணங்க, மேவா, வினைகளே.
உரை
   
268. வான் ஆர் திங்கள் வளர் புன் சடை வைத்து,
தேன் ஆர் செம்பொன் பள்ளி மேவிய,
ஊன் ஆர் தலையில் பலி கொண்டு உழல் வாழ்க்கை
ஆனான் கழலே அடைந்து வாழ்மினே!
உரை
   
269. கார் ஆர் வண்ணன், கனகம் அனையானும்,
தேரார் செம்பொன் பள்ளி மேவிய,
நீர் ஆர் நிமிர்புன் சடை, எம் நிமலனை
ஓராதவர்மேல் ஒழியா, ஊனமே.
உரை
   
270. “மாசு ஆர் உடம்பர், மண்டைத் தேரரும்,
பேசா வண்ணம் பேசித் திரியவே,
தேசு ஆர் செம்பொன் பள்ளி மேவிய
ஈசா!” என்ன, நில்லா, இடர்களே.
உரை
   
271. நறவு ஆர் புகலி ஞானசம்பந்தன்
செறு ஆர் செம்பொன் பள்ளி மேயானைப்
பெறும் ஆறு இசையால் பாடல் இவைபத்தும்
உறுமா சொல்ல, ஓங்கி வாழ்வரே.
உரை