தொடக்கம் | ||
28. திருச்சோற்றுத்துறை - தக்கராகம்
|
||
294. |
செப்பம் நெஞ்சே, நெறி கொள்! சிற்றின்பம் துப்பன் என்னாது, அருளே துணை ஆக, ஒப்பர் ஒப்பர் பெருமான், ஒளி வெண் நீற்று அப்பர், சோற்றுத்துறை சென்று அடைவோமே. |
உரை |
295. |
பாலும் நெய்யும் தயிரும் பயின்று ஆடி, தோலும் நூலும் துதைந்த வரைமார்பர், மாலும் சோலை புடை சூழ் மடமஞ்ஞை ஆலும் சோற்றுத்துறை சென்று அடைவோமே. |
உரை |
296. |
செய்யர், செய்யசடையர், விடை ஊர்வர், கை கொள் வேலர், கழலர், கரிகாடர், தையலாள் ஒரு பாகம் ஆய எம் ஐயர், சோற்றுத்துறை சென்று அடைவோமே. |
உரை |
297. |
பிணி கொள் ஆக்கை ஒழிய, பிறப்பு உளீர்! துணி கொள் போரார், துளங்கும் மழுவாளர், மணி கொள் கண்டர், மேய வார் பொழில் அணி கொள் சோற்றுத்துறை சென்று அடைவோமே. |
உரை |
298. |
பிறையும் அரவும் புனலும் சடை வைத்து, மறையும் ஓதி, மயானம் இடம் ஆக உறையும் செல்வம் உடையார், காவிரி அறையும் சோற்றுத்துறை சென்று அடைவோமே. |
உரை |
299. |
துடிகளோடு முழவம் விம்மவே, பொடிகள் பூசி, புறங்காடு அரங்கு ஆக, படி கொள் பாணி பாடல் பயின்று ஆடும் அடிகள் சோற்றுத்துறை சென்று அடைவோமே. |
உரை |
300. |
சாடிக் காலன் மாள, தலைமாலை சூடி, மிக்குச் சுவண்டு ஆய் வருவார், தாம் பாடி ஆடிப் பரவுவார் உள்ளத்து ஆடி, சோற்றுத்துறை சென்று அடைவோமே. |
உரை |
301. |
பெண் ஓர்பாகம் உடையார், பிறைச் சென்னிக் கண் ஓர்பாகம் கலந்த நுதலினார், எண்ணாது அரக்கன் எடுக்க ஊன்றிய அண்ணல், சோற்றுத்துறை சென்று அடைவோமே. |
உரை |
302. |
தொழுவார் இருவர் துயரம் நீங்கவே அழல் ஆய் ஓங்கி அருள்கள் செய்தவன், விழவு ஆர் மறுகில் விதியால் மிக்க எம் எழில் ஆர் சோற்றுத்துறை சென்று அடைவோமே. |
உரை |
303. |
கோது சாற்றித் திரிவார், அமண் குண்டர், ஓதும் ஓத்தை உணராது எழு, நெஞ்சே! நீதி நின்று நினைவார் வேடம் ஆம் ஆதி சோற்றுத்துறை சென்று அடைவோமே. |
உரை |
304. |
அம் தண் சோற்றுத்துறை எம் ஆதியைச் சிந்தை செய்ம்மின், அடியர் ஆயினீர்! சந்தம் பரவு ஞானசம்பந்தன் வந்த ஆறே புனைதல் வழிபாடே. |
உரை |