30. திருப்புகலி - தக்கராகம்
 
316. விதி ஆய், விளைவு ஆய், விளைவின் பயன் ஆகி,
கொதியா வரு கூற்றை உதைத்தவர் சேரும்
பதி ஆவது பங்கயம் நின்று அலர, தேன்
பொதி ஆர் பொழில் சூழ் புகலி நகர்தானே.
உரை
   
317. ஒன்னார் புரம் மூன்றும் எரித்த ஒருவன்
மின் ஆர் இடையாளொடும் கூடிய வேடம்
தன்னால் உறைவு ஆவது தண்கடல் சூழ்ந்த
பொன் ஆர் வயல் பூம் புகலி நகர்தானே.
உரை
   
318. வலி இல் மதி செஞ்சடை வைத்த மணாளன்,
புலியின் அதள் கொண்டு அரை ஆர்த்த புனிதன்,
மலியும் பதி மா மறையோர் நிறைந்து ஈண்டிப்
பொலியும் புனல் பூம் புகலி நகர்தானே.
உரை
   
319. கயல் ஆர் தடங்கண்ணியொடும் எருது ஏறி
அயலார் கடையில் பலி கொண்ட அழகன்
இயலால் உறையும் இடம் எண் திசையோர்க்கும்
புயல் ஆர் கடல் பூம் புகலி நகர்தானே.
உரை
   
320. காது ஆர் கன பொன் குழை தோடு அது இலங்க,
தாது ஆர் மலர் தண் சடை ஏற முடித்து,
நாதான் உறையும் இடம் ஆவது நாளும்
போது ஆர் பொழில் பூம் புகலி நகர்தானே.
உரை
   
321. வலம் ஆர் படை மான் மழு ஏந்திய மைந்தன்,
கலம் ஆர் கடல் நஞ்சு அமுது உண்ட கருத்தன்,
குலம் ஆர் பதி கொன்றைகள் பொன் சொரிய, தேன்
புலம் ஆர் வயல் பூம் புகலி நகர்தானே.
உரை
   
322. கறுத்தான், கனலால் மதில் மூன்றையும் வேவ;
செறுத்தான், திகழும் கடல் நஞ்சு அமுது ஆக;
அறுத்தான், அயன்தன் சிரம் ஐந்திலும் ஒன்றை;
பொறுத்தான்; இடம் பூம் புகலி நகர்தானே.
உரை
   
323. தொழிலால் மிகு தொண்டர்கள் தோத்திரம் சொல்ல,
எழில் ஆர் வரையால் அன்று அரக்கனைச் செற்ற
கழலான் உறையும் இடம் கண்டல்கள் மிண்டி,
பொழிலால் மலி பூம் புகலி நகர்தானே.
உரை
   
324. மாண்டார் சுடலைப் பொடி பூசி, மயானத்து
ஈண்டா, நடம் ஆடிய ஏந்தல், தன் மேனி
நீண்டான் இருவர்க்கு எரி ஆய், அரவு ஆரம்
பூண்டான், நகர் பூம் புகலி நகர்தானே.
உரை
   
325. உடையார் துகில் போர்த்து உழல்வார், சமண்கையர்,
அடையாதன சொல்லுவர் ஆதர்கள் ஓத்தைக்
கிடையாதவன் தன் நகர் நல் மலி பூகம்
புடை ஆர்தரு பூம் புகலி நகர்தானே.
உரை
   
326. இரைக்கும் புனல் செஞ்சடை வைத்த எம்மான் தன்-
புரைக்கும் பொழில் பூம் புகலி நகர் தன் மேல்
உரைக்கும் தமிழ் ஞானசம்பந்தன் ஒண் மாலை
வரைக்கும் தொழில் வல்லவர் நல்லவர் தாமே.
உரை