35. திருவீழிமிழலை - தக்கராகம்
 
371. அரை ஆர் விரி கோவண ஆடை,
நரை ஆர் விடை ஊர்தி, நயந்தான்,
விரை ஆர் பொழில், வீழி மிழலை
உரையால் உணர்வார் உயர்வாரே.
உரை
   
372. புனைதல் புரி புன்சடை தன் மேல்
கனைதல் ஒரு கங்கை கரந்தான்,
வினை இல்லவர், வீழி மிழலை
நினைவு இல்லவர் நெஞ்சமும் நெஞ்சே?
உரை
   
373. அழ வல்லவர், ஆடியும் பாடி
எழ வல்லவர், எந்தை அடிமேல்
விழ வல்லவர், வீழி மிழலை
தொழ வல்லவர், நல்லவர்; தொண்டே!
உரை
   
374. உரவம் புரி புன் சடை தன்மேல்
அரவம் அரை ஆர்த்த அழகன்,
விரவும் பொழில், வீழி மிழலை
பரவும்(ம்) அடியார் அடியாரே!
உரை
   
375. கரிது ஆகிய நஞ்சு அணி கண்டன்,
வரிது ஆகிய வண்டு அறை கொன்றை
விரி தார் பொழில், வீழி மிழலை
உரிதா நினைவார் உயர்வாரே.
உரை
   
376. சடை ஆர் பிறையான், சரி பூதப்
படையான், கொடி மேலது ஒரு பைங்கண்
விடையான், உறை வீழி மிழலை
அடைவார் அடியார் அவர் தாமே.
உரை
   
377. செறி ஆர் கழலும் சிலம்பு ஆர்க்க
நெறி ஆர் குழலாளொடு நின்றான்,
வெறி ஆர் பொழில், வீழி மிழலை
அறிவார் அவலம் அறியாரே.
உரை
   
378. உளையா வலி ஒல்க, அரக்கன்,
வளையா விரல் ஊன்றிய மைந்தன்,
விளை ஆர் வயல், வீழி மிழலை
அளையா வருவார் அடியாரே.
உரை
   
379. மருள் செய்து இருவர் மயல் ஆக
அருள் செய்தவன், ஆர் அழல் ஆகி
வெருள் செய்தவன், வீழி மிழலை
தெருள் செய்தவர் தீவினை தேய்வே.
உரை
   
380. துளங்கும் நெறியார் அவர் தொன்மை
வளம் கொள்ளன்மின், புல் அமண் தேரை!
விளங்கும் பொழில் வீழி மிழலை
உளம் கொள்பவர் தம் வினை ஓய்வே.
உரை
   
381. நளிர் காழியுள் ஞானசம்பந்தன்
குளிர் ஆர் சடையான் அடி கூற,
மிளிர் ஆர் பொழில், வீழி மிழலை
கிளர் பாடல் வல்லார்க்கு இலை, கேடே.
உரை