36. திருஐயாறு - தக்கராகம்
 
382. கலை ஆர் மதியோடு உர நீரும்
நிலை ஆர் சடையார் இடம் ஆகும்
மலை ஆரமும் மா மணி சந்தோடு
அலை ஆர் புனல் சேரும் ஐயாறே.
உரை
   
383. மதி ஒன்றிய கொன்றை வடத்தன்,
மதி ஒன்ற உதைத்தவர் வாழ்வு
மதியினொடு சேர் கொடி மாடம்
மதியம் பயில்கின்ற ஐயாறே.
உரை
   
384. கொக்கின் இறகினொடு வன்னி
புக்க சடையார்க்கு இடம் ஆகும்
திக்கின் இசை தேவர் வணங்கும்
அக்கின் அரையாரது ஐயாறே.
உரை
   
385. சிறை கொண்ட புரம் அவை சிந்தக்
கறை கொண்டவர் காதல் செய் கோயில்
மறை கொண்ட நல் வானவர் தம்மில்
அறையும் ஒலி சேரும் ஐயாறே.
உரை
   
386. உமையாள் ஒரு பாகம் அது ஆகச்
சமைவார் அவர் சார்வு இடம் ஆகும்
அமையார் உடல் சோர்தரு முத்தம்
அமையா வரும் அம் தண் ஐயாறே.
உரை
   
387. தலையின் தொடை மாலை அணிந்து
கலை கொண்டது ஒரு கையினர் சேர்வு ஆம்
நிலை கொண்ட மனத்தவர் நித்தம்
மலர் கொண்டு வணங்கும் ஐயாறே.
உரை
   
388. வரம் ஒன்றிய மா மலரோன் தன்
சிரம் ஒன்றை அறுத்தவர் சேர்வு ஆம்
வரை நின்று இழி வார் தரு பொன்னி
அரவம் கொடு சேரும் ஐயாறே.
உரை
   
389. வரை ஒன்று அது எடுத்த அரக்கன்
சிரம் மங்க நெரித்தவர் சேர்வு ஆம்
விரையின் மலர் மேதகு பொன்னித்
திரை தன்னொடு சேரும் ஐயாறே.
உரை
   
390. சங்கக் கயனும் அறியாமை
பொங்கும் சுடர் ஆனவர் கோயில்
கொங்கில் பொலியும் புனல் கொண்டு
அங்கிக்கு எதிர் காட்டும் ஐயாறே.
உரை
   
391. துவர் ஆடையர், தோல் உடையார்கள்,
கவர் வாய்மொழி காதல் செய்யாதே,
தவராசர்கள் தாமரையானோடு
அவர்தாம் அணை அம் தண் ஐயாறே.
உரை
   
392. கலை ஆர் கலிக்காழியர் மன்னன்-
நலம் ஆர்தரு ஞானசம்பந்தன்-
அலை ஆர் புனல் சூழும் ஐயாற்றைச்
சொலும் மாலை வல்லார் துயர் வீடே.
உரை