37. திருப்பனையூர் - தக்கராகம்
 
393. அரவச் சடை மேல் மதி, மத்தம்,
விரவிப் பொலிகின்றவன் ஊர் ஆம்
நிரவிப் பல தொண்டர்கள் நாளும்
பரவிப் பொலியும் பனையூரே.
உரை
   
394. எண் ஒன்றி நினைந்தவர் தம்பால்
உள் நின்று மகிழ்ந்தவன் ஊர் ஆம்
கள் நின்று எழு சோலையில் வண்டு
பண் நின்று ஒலி செய் பனையூரே.
உரை
   
395. அலரும் எறி செஞ்சடை தன் மேல்
மலரும் பிறை ஒன்று உடையான் ஊர்
சிலர் என்றும் இருந்து அடி பேண,
பலரும் பரவும் பனையூரே.
உரை
   
396. இடி ஆர் கடல் நஞ்சு அமுது உண்டு
பொடி ஆடிய மேனியினான் ஊர்
அடியார் தொழ, மன்னவர் ஏத்த,
படியார் பணியும் பனையூரே.
உரை
   
397. அறை ஆர் கழல் மேல் அரவு ஆட,
இறை ஆர் பலி தேர்ந்தவன் ஊர் ஆம்
பொறையார் மிகு சீர் விழ மல்க,
பறையார் ஒலிசெய் பனையூரே.
உரை
   
398. அணியார் தொழ வல்லவர் ஏத்த,
மணி ஆர் மிடறு ஒன்று உடையான் ஊர்
தணி ஆர் மலர் கொண்டு இரு போதும்
பணிவார் பயிலும் பனையூரே.
உரை
   
399. அடையாதவர் மூ எயில் சீறும்
விடையான், விறல் ஆர் கரியின் தோல்
உடையான் அவன், ஒண் பலபூதப்
படையான் அவன், ஊர் பனையூரே.
உரை
   
400. இலகும் முடிபத்து உடையானை
அல்லல் கண்டு அருள் செய்த எம் அண்ணல்,
உலகில் உயிர் நீர் நிலம் மற்றும்
பல கண்டவன், ஊர் பனையூரே.
உரை
   
401. வரம் முன்னி மகிழ்ந்து எழுவீர்காள்!
சிரம் முன் அடி தாழ வணங்கும்
பிரமனொடு மால் அறியாத
பரமன் உறையும் பனையூரே!
உரை
   
402. அழி வல் அமணரொடு தேரர்
மொழி வல்லன சொல்லிய போதும்,
இழிவு இல்லது ஒரு செம்மையினான் ஊர்
பழி இல்லவர் சேர் பனையூரே.
உரை
   
403. பார் ஆர் விடையான் பனையூர் மேல்
சீர் ஆர் தமிழ் ஞானசம்பந்தன்
ஆராத சொல் மாலைகள் பத்தும்
ஊர் ஊர் நினைவார் உயர்வாரே.
உரை