42. திருப்பேணுபெருந்துறை - தக்கராகம்
 
448. பைம் மா நாகம், பல்மலர்க் கொன்றை, பன்றி வெண் கொம்பு
                                                             ஒன்று, பூண்டு,
செம்மாந்து, "ஐயம் பெய்க!" என்று சொல்லி, செய் தொழில்
                                                             பேணியோர்; செல்வர்;
அம் மான் நோக்கு இயல், அம் தளிர்மேனி, அரிவை ஓர்பாகம்
                                                             அமர்ந்த
பெம்மான்; நல்கிய தொல்புகழாளர் பேணு பெருந்துறையாரே.
உரை
   
449. மூவரும் ஆகி, இருவரும் ஆகி, முதல்வனும் ஆய், நின்ற மூர்த்தி
பாவங்கள் தீர்தர நல்வினை நல்கி, பல்கணம் நின்று பணிய,
சாவம் அது ஆகிய மால்வரை கொண்டு தண் மதில் மூன்றும் எரித்த
தேவர்கள் தேவர், எம்பெருமானார் தீது இல் பெருந்துறையாரே.
உரை
   
450. செய் பூங்கொன்றை, கூவிளமாலை, சென்னியுள் சேர் புனல், சேர்த்தி,
கொய்ங்கோதை மாது உமை பாகம் கூடி ஓர் பீடு உடை வேடர்
கை போல் நான்ற கனிகுலைவாழை காய்குலையின் கமுகு ஈன,
பெய் பூம்பாளை பாய்ந்து இழி தேறல் பில்கு பெருந்துறையாரே.
உரை
   
451. நிலனொடு வானும் நீரொடு தீயும் வாயுவும் ஆகி, ஓர் ஐந்து
புலனொடு வென்று, பொய்ம்மைகள் தீர்ந்த புண்ணியர் வெண்பொடிப் பூசி,
நலனொடு தீங்கும் தான் அலது இன்றி, நன்கு எழு சிந்தையர் ஆகி,
மலனொடு மாசும் இல்லவர் வாழும் மல்கு பெருந்துறையாரே.
உரை
   
452. பணிவு ஆய் உள்ள நன்கு எழு நாவின் பத்தர்கள் பத்திமை செய்ய,
துணியார் தங்கள் உள்ளம் இலாத சுமடர்கள் சோதிப்பரியார்;
அணி ஆர் நீலம் ஆகிய கண்டர் அரிசில் உரிஞ்சு கரைமேல்
மணி வாய் நீலம்வாய் கமழ் தேறல் மல்கு பெருந்துறையாரே.
உரை
   
453. எண்ணார் தங்கள் மும்மதில் வேவ ஏ வலம் காட்டிய எந்தை,
விண்ணோர் சாரத் தன் அருள் செய்த வித்தகர், வேத முதல்வர்,
பண் ஆர் பாடல் ஆடல் அறாத பசுபதி, ஈசன், ஓர் பாகம்
பெண் ஆண் ஆய வார்சடை அண்ணல் பேணு பெருந்துறையாரே.
உரை
   
454. விழை ஆர் உள்ளம் நன்கு எழு நாவில் வினை கெட, வேதம்
                                      ஆறு அங்கம்
பிழையா வண்ணம் பண்ணிய ஆற்றல், பெரியோர் ஏத்தும் பெருமான்-
தழை ஆர் மாவின் தாழ் கனி உந்தித் தண் அரிசில் புடை சூழ்ந்த
குழை ஆர் சோலை மென் நடை அன்னம் கூடு பெருந்துறையாரே.
உரை
   
455. பொன் அம் கானல் வெண் திரை சூழ்ந்த பொருகடல் வேலி இலங்கை
மன்னன் ஒல்க மால்வரை ஊன்றி, மா முரண் ஆகமும் தோளும்
முன் அவை வாட்டி, பின் அருள் செய்த மூஇலைவேல் உடை மூர்த்தி
அன்னம் கன்னிப்பேடையொடு ஆடி அணவு பெருந்துறையாரே.
உரை
   
456. புள் வாய் போழ்ந்து மா நிலம் கீண்ட பொருகடல் வண்ணனும், பூவின்
உள் வாய் அல்லிமேல் உறைவானும், உணர்வு அரியான்; உமைகேள்வன்-
முள் வாய் தாளின் தாமரைமொட்டு இன்முகம் மலர, கயல் பாய,
கள் வாய் நீலம் கண்மலர் ஏய்க்கும் காமர் பெருந்துறையாரே.
உரை
   
457. குண்டும் தேரும், கூறை களைந்தும் கூப்பிலர் செப்பிலர் ஆகி
மிண்டும் மிண்டர் மிண்டு அவை கண்டு மிண்டு செயாது விரும்பும்!
தண்டும் பாம்பும் வெண்தலை சூலம் தாங்கிய தேவர் தலைவர்
வண்டும் தேனும் வாழ் பொழில் சோலை மல்கு பெருந்துறையாரே.
உரை
   
458. கடை ஆர் மாடம் நன்கு எழு வீதிக் கழுமல ஊரன்-கலந்து
நடை ஆர் இன்சொல் ஞானசம்பந்தன்-நல்ல பெருந்துறை மேய
படை ஆர் சூலம் வல்லவன் பாதம் பரவிய பத்து இவை வல்லார்
உடையார் ஆகி, உள்ளமும் ஒன்றி, உலகினில் மன்னுவர்தாமே.
உரை