43. திருக்கற்குடி - தக்கராகம்
 
459. வடம் திகழ் மென் முலையாளைப் பாகம் அது ஆக மதித்து,
தடந் திரை சேர் புனல்மாதைத் தாழ்சடை வைத்த சதுரர்;
இடம் திகழ் முப்புரி நூலர்; துன்பமொடு இன்பம் அது எல்லாம்
கடந்தவர் காதலில் வாழும் கற்குடி மா மலையாரே.
உரை
   
460. அங்கம் ஓர் ஆறொடு ஐவேள்வி ஆன அருமறை நான்கும்
பங்கம் இல் பாடலோடு ஆடல் பாணி பயின்ற படிறர்
சங்கம் அது ஆர் குறமாதர் தம் கையின் மைந்தர்கள் தாவிக்
கங்குலில் மா மதி பற்றும் கற்குடி மா மலையாரே.
உரை
   
461. நீர் அகலம் தரு சென்னி நீடிய மத்தமும் வைத்து,
தாரகையின் ஒளி சூழ்ந்த தண்மதி சூடிய சைவர்
போர் அகலம் தரு வேடர் புனத்து இடை இட்ட விறகில்
கார் அகிலின் புகை விம்மும் கற்குடி மா மலையாரே.
உரை
   
462. “ஒருங்கு அளி, நீ இறைவா!” என்று உம்பர்கள் ஓலம் இடக் கண்டு,
இருங்களம் ஆர விடத்தை இன் அமுது உன்னிய ஈசர்
மருங்கு அளி ஆர் பிடி வாயில் வாழ் வெதிரின் முளை வாரி,
கருங்களியானை கொடுக்கும் கற்குடி மா மலையாரே.
உரை
   
463. போர் மலி திண் சிலை கொண்டு, பூதகணம் புடை சூழ,
பார் மலி வேடு உரு ஆகி, பண்டு ஒருவற்கு அருள் செய்தார்
ஏர் மலி கேழல் கிளைத்த இனொளி மா மணி எங்கும்
கார் மலி வேடர் குவிக்கும் கற்குடி மா மலையாரே.
உரை
   
464. உலந்தவர் என்பு அது அணிந்தே, ஊர் இடு பிச்சையர் ஆகி,
விலங்கல்வில் வெங்கனலாலே மூ எயில் வேவ முனிந்தார்
நலம் தரு சிந்தையர் ஆகி, நா மலி மாலையினாலே
கலந்தவர் காதலில் வாழும் கற்குடி மா மலையாரே.
உரை
   
465. மான் இடம் ஆர்தரு கையர், மா மழு ஆரும் வலத்தார்,
ஊன் இடை ஆர் தலை ஓட்டில் உண்கலன் ஆக உகந்தார்
தேன் இடை ஆர் தரு சந்தின் திண் சிறையால் தினை வித்தி,
கான் இடை வேடர் விளைக்கும் கற்குடி மா மலையாரே.
உரை
   
466. வாள் அமர் வீரம் நினைந்த இராவணன் மாமலையின் கீழ்
தோள் அமர் வன்தலை குன்றத் தொல்விரல் ஊன்று துணைவர்
தாள் அமர் வேய் தலை பற்றித் தாழ் கரி விட்ட விசை போய்,
காளம் அது ஆர் முகில் கீறும் கற்குடி மா மலையாரே.
உரை
   
467. தண்டு அமர் தாமரையானும், தாவி இம் மண்ணை அளந்து
கொண்டவனும், அறிவு ஒண்ணாக் கொள்கையர்; வெள்விடை ஊர்வர்
வண்டு இசை ஆயின பாட, நீடிய வார் பொழில் நீழல்,
கண்டு அமர் மா மயில் ஆடும் கற்குடி மா மலையாரே.
உரை
   
468. மூத் துவர் ஆடையினாரும், மூசு கடுப்பொடியாரும்,
நாத் துவர் பொய்ம்மொழியார்கள், நயம் இலரா மதி வைத்தார்;
ஏத்து உயர் பத்தர்கள் சித்தர் இறைஞ்ச, அவர் இடம் எல்லாம்
காத்தவர் காமரு சோலைக் கற்குடி மா மலையாரே.
உரை
   
469. காமரு வார் பொழில் சூழும் கற்குடி மா மலையாரை
நா மரு வண்புகழ்க் காழி நலம் திகழ் ஞானசம்பந்தன்
பா மரு செந்தமிழ் மாலை பத்து இவை பாட வல்லார்கள்
பூ மலி வானவரோடும் பொன்னுலகில் பொலிவாரே.
உரை