தொடக்கம் | ||
44. திருப்பாச்சிலாச்சிராமம் - தக்கராகம்
|
||
470. |
துணி வளர் திங்கள் துளங்கி விளங்க, சுடர்ச்சடை சுற்றி முடித்து, பணி வளர் கொள்கையர், பாரிடம் சூழ, ஆர் இடமும் பலி தேர்வர்; அணி வளர் கோலம் எலாம் செய்து, பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற மணி வளர் கண்டரோ, மங்கையை வாட மயல் செய்வதோ இவர் மாண்பே? |
உரை |
471. |
கலை புனை மானுரி-தோல் உடை ஆடை; கனல் சுடரால் இவர் கண்கள்; தலை அணி சென்னியர்; தார் அணி மார்பர்; தம் அடிகள் இவர் என்ன, அலை புனல் பூம் பொழில் சூழ்ந்து அமர் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற இலை புனை வேலரோ, ஏழையை வாட இடர் செய்வதோ இவர் ஈடே? |
உரை |
472. |
வெஞ்சுடர் ஆடுவர், துஞ்சு இருள்; மாலை வேண்டுவர்; பூண்பது வெண்நூல்; நஞ்சு அடை கண்டர்; நெஞ்சு இடம் ஆக நண்ணுவர், நம்மை நயந்து; மஞ்சு அடை மாளிகை சூழ்தரு பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற செஞ்சுடர் வண்ணரோ, பைந்தொடி வாடச் சிதை செய்வதோ இவர் சீரே? |
உரை |
473. |
கன மலர்க்கொன்றை அலங்கல் இலங்க, கனல் தரு தூமதிக்கண்ணி புன மலர் மாலை அணிந்து, அழகு ஆய புனிதர் கொல் ஆம் இவர் என்ன, அனம் மலி வண்பொழில் சூழ் தரு பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற மனம் மலி மைந்தரோ, மங்கையை வாட மயல் செய்வதோ இவர் மாண்பே? |
உரை |
474. |
மாந்தர் தம் பால் நறுநெய் மகிழ்ந்து ஆடி, வளர்சடை மேல் புனல் வைத்து, மோந்தை, முழா, குழல், தாளம், ஒர் வீணை, முதிர ஓர் வாய் மூரி பாடி, ஆந்தைவிழிச் சிறு தத்தர்; பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற சாந்து அணி மார்பரோ, தையலை வாடச் சதுர் செய்வதோ இவர் சார்வே? |
உரை |
475. |
நீறு மெய் பூசி, நிறை சடை தாழ, நெற்றிக்கண்ணால் உற்று நோக்கி, ஆறுஅது சூடி, ஆடு அரவு ஆட்டி, ஐவிரல் கோவண ஆடை பால் தரு மேனியர்; தத்தர்; பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற ஏறு அது ஏறியர்; ஏழையை வாட இடர் செய்வதோ இவர் ஈடே? |
உரை |
476. |
பொங்கு இள நாகம், ஓர் ஏகவடத்தோடு, ஆமை,
வெண்நூல், புனை கொன்றை, கொங்கு இள மாலை, புனைந்து அழகு ஆய குழகர்கொல் ஆம் இவர் என்ன, அங்கு இளமங்கை ஓர் பங்கினர்; பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற சங்கு ஒளி வண்ணரோ, தாழ்குழல் வாடச் சதிர் செய்வதோ இவர் சார்வே? |
உரை |
477. |
ஏ வலத்தால் விசயற்கு அருள்செய்து, இராவணன்தன்னை ஈடு அழித்து, மூவரிலும் முதல் ஆய் நடு ஆய மூர்த்தியை அன்றி மொழியாள்; யாவர்களும் பரவும் எழில் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற தேவர்கள் தேவரோ, சேயிழை வாடச் சிதைசெய்வதோ இவர் சேர்வே? |
உரை |
478. |
மேலது நான்முகன் எய்தியது இல்லை, கீழது சேவடி தன்னை நீல் அது வண்ணனும் எய்தியது இல்லை, என இவர் நின்றதும் அல்லால், ஆல் அது மா மதி தோய் பொழில் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற பால் அது வண்ணரோ, பைந்தொடி வாடப் பழி செய்வதோ இவர் பண்பே? |
உரை |
479. |
நாணொடு கூடிய சாயினரேனும் நகுவர், அவர் இருபோதும்; ஊணொடு கூடிய உட்கும் தகையார் உரைகள் அவை கொள வேண்டா; ஆணொடு பெண்வடிவு ஆயினர், பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற பூண் நெடு மார்பரோ, பூங்கொடி வாடப் புனை செய்வதோ இவர் பொற்பே? |
உரை |
480. |
அகம் மலி அன்பொடு தொண்டர் வணங்க, ஆச்சிராமத்து உறைகின்ற புகை மலி மாலை புனைந்து அழகு ஆய புனிதர் கொல் ஆம் இவர் என்ன, நகை மலி தண்பொழில் சூழ்தரு காழி நல்-தமிழ் ஞானசம்பந்தன் தகை மலி தண் தமிழ் கொண்டு இவை ஏத்த, சாரகிலா, வினைதானே. |
உரை |