தொடக்கம் | ||
47. திருச்சிரபுரம் - பழந்தக்கராகம்
|
||
504. |
பல் அடைந்த வெண் தலையில் பலி கொள்வது அன்றியும், போய், வில் அடைந்த புருவ நல்லாள் மேனியில் வைத்தல் என்னே சொல் அடைந்த தொல் மறையோடு அங்கம் கலைகள் எல்லாம் செல் அடைந்த செல்வர் வாழும் சிரபுரம் மேயவனே? |
உரை |
505. |
கொல்லை முல்லை நகையினாள் ஓர் கூறு அது அன்றியும், போய், அல்லல் வாழ்க்கைப் பலி கொண்டு உண்ணும் ஆதரவு என்னைகொல் ஆம் சொல்ல நீண்ட பெருமையாளர், தொல்கலை கற்று வல்லார், செல்ல நீண்ட செல்வம் மல்கு சிரபுரம் மேயவனே? |
உரை |
506. |
நீர் அடைந்த சடையின்மேல் ஓர் நிகழ்மதி அன்றியும், போய், ஊர் அடைந்த ஏறு அது ஏறி உண் பலி கொள்வது என்னே கார் அடைந்த சோலை சூழ்ந்து காமரம் வண்டு இசைப்ப, சீர் அடைந்த செல்வம் ஓங்கு சிரபுரம் மேயவனே? |
உரை |
507. |
கை அடைந்த மானினோடு கார் அரவு அன்றியும், போய், மெய் அடைந்த வேட்கையோடு மெல்லியல் வைத்தல் என்னே கை அடைந்த களைகள் ஆகச் செங்கழுநீர் மலர்கள் செய் அடைந்த வயல்கள் சூழ்ந்த சிரபுரம் மேயவனே? |
உரை |
508. |
புரம் எரித்த வெற்றியோடும் போர் மதயானை தன்னைக் கரம் எடுத்துத் தோல் உரித்த காரணம் ஆவது என்னே மரம் உரித்த தோல் உடுத்த மா தவர் தேவரோடும் சிரம் எடுத்த கைகள் கூப்பும் சிரபுரம் மேயவனே? |
உரை |
509. |
கண்ணு மூன்றும் உடையது அன்றி, கையினில் வெண்மழுவும் பண்ணு மூன்று வீணையோடு பாம்பு உடன் வைத்தல் என்னே எண்ணும் மூன்று கனலும் ஓம்பி, எழுமையும் விழுமியர் ஆய், திண்ணம் மூன்று வேள்வியாளர் சிரபுரம் மேயவனே? |
உரை |
510. |
குறைபடாத வேட்கையோடு கோல்வளையாள் ஒருபால் பொறை படாத இன்பமோடு புணர்தரும் மெய்ம்மை என்னே இறை படாத மென்முலையார் மாளிகைமேல் இருந்து, சிறை படாத பாடல் ஓங்கு சிரபுரம் மேயவனே? |
உரை |
511. |
மலை எடுத்த வாள் அரக்கன் அஞ்ச, ஒருவிரலால் நிலை எடுத்த கொள்கையானே! நின்மலனே! நினைவார் துலை எடுத்த சொல் பயில்வார் மேதகு வீதிதோறும் சிலை எடுத்த தோளினானே! சிரபுரம் மேயவனே! |
உரை |
512. |
மாலினோடு மலரினானும் வந்தவர் காணாது சாலும் அஞ்சப்பண்ணி நீண்ட தத்துவம் மேயது என்னே நாலு வேதம் ஓதலார்கள் நம் துணை என்று இறைஞ்ச, சேலு மேயும் கழனி சூழ்ந்த சிரபுரம் மேயவனே? |
உரை |
513. |
புத்தரோடு சமணர் சொற்கள் புறன் உரை என்று இருக்கும் பத்தர் வந்து பணிய வைத்த பான்மை அது என்னை கொல் ஆம் மத்தயானை உரியும் போர்த்து மங்கையொடும் உடனே, சித்தர் வந்து பணியும் செல்வச் சிரபுரம் மேயவனே? |
உரை |
514. |
தெங்கம் நீண்ட சோலை சூழ்ந்த சிரபுரம் மேயவனை அங்கம் நீண்ட மறைகள் வல்ல அணி கொள் சம்பந்தன் உரை பங்கம் நீங்கப் பாட வல்ல பத்தர்கள் பார் இதன் மேல் சங்கமோடு நீடி வாழ்வர், தன்மையினால் அவரே. |
உரை |