48. திருச்சேய்ஞலூர் - பழந்தக்கராகம்
 
515. நூல் அடைந்த கொள்கையாலே நுன் அடி கூடுதற்கு
மால் அடைந்த நால்வர் கேட்க, நல்கிய நல் அறத்தை,
ஆல் அடைந்த நீழல் மேவி, அருமறை சொன்னது என்னே
சேல் அடைந்த தண் கழனிச் சேய்ஞலூர் மேயவனே?
உரை
   
516. நீறு அடைந்த மேனியின் கண் நேரிழையாள் ஒருபால்
கூறு அடைந்த கொள்கை அன்றி, கோல வளர் சடைமேல்
ஆறு அடைந்த திங்கள் சூடி, அரவம் அணிந்தது என்னே
சேறு அடைந்த தண் கழனிச் சேய்ஞலூர் மேயவனே?
உரை
   
517. ஊன் அடைந்த வெண் தலையினோடு பலி திரிந்து,
கான் அடைந்த பேய்களோடு தம் கலந்து உடனே,
மான் அடைந்த நோக்கி காண, மகிழ்ந்து எரி ஆடல் என்னே
தேன் அடைந்த சோலை மல்கு சேய்ஞலூர் மேயவனே?
உரை
   
518. வீண் அடைந்த மும்மதிலும், வில் மலையா, அரவின்
நாண் அடைந்த வெஞ்சரத்தால், நல் எரியூட்டல் என்னே
பாண் அடைந்த வண்டு பாடும் பைம்பொழில் சூழ்ந்து அழகு ஆர்
சேண் அடைந்த மாடம் மல்கு சேய்ஞலூர் மேயவனே?
உரை
   
519. பேய் அடைந்த காடு இடமாப் பேணுவது அன்றியும், போய்,
வேய் அடைந்த தோளி அஞ்ச, வேழம் உரித்தது என்னே
வாய் அடைந்த நால்மறை ஆறு அங்கமோடு ஐவேள்வித்
தீ அடைந்த செங்கையாளர் சேய்ஞலூர் மேயவனே?
உரை
   
520. காடு அடைந்த ஏனம் ஒன்றின் காரணம் ஆகி வந்து,
வேடு அடைந்த வேடன் ஆகி, விசயனொடு எய்தது என்னே
கோடு அடைந்த மால்களிற்றுக் கோச்செங்கணாற்கு அருள்செய்
சேடு அடைந்த செல்வர் வாழும் சேய்ஞலூர் மேயவனே?
உரை
   
521. பீர் அடைந்த பால் அது ஆட்ட, பேணாது, அவன் தாதை
வேர் அடைந்து பாய்ந்த தாளை வேர்த் தடிந்தான் தனக்குத்
தார் அடைந்த மாலை சூட்டித் தலைமை வகுத்தது என்னே
சீர் அடைந்த கோயில் மல்கு சேய்ஞலூர் மேயவனே?
உரை
   
522. மா அடைந்த தேர் அரக்கன் வலி தொலைவித்து அவன்தன்
நா அடைந்த பாடல் கேட்டு நயந்து, அருள் செய்தது என்னே
பூ அடைந்த நான்முகன் போல் பூசுரர் போற்றி செய்யும்
சே அடைந்த ஊர்தியானே, சேய்ஞலூர் மேயவனே?
உரை
   
523. கார் அடைந்த வண்ணனோடு கனகம் அனையானும்,
பார் இடந்தும் விண் பறந்தும் பாதம் முடி காணார்,
சீர் அடைந்து வந்து போற்ற, சென்று அருள் செய்தது என்னே
தேர் அடைந்த மா மறுகின் சேய்ஞலூர் மேயவனே?
உரை
   
524. மாசு அடைந்த மேனியாரும், மனம் திரியாத கஞ்சி
நேசு அடைந்த ஊணினாரும், நேசம் இலாதது என்னே
வீசு அடைந்த தோகை ஆட, விரை கமழும் பொழில்வாய்,
தேசு அடைந்த வண்டு பாடும் சேய்ஞலூர் மேயவனே?
உரை
   
525. சேய் அடைந்த சேய்ஞலூரில் செல்வன சீர் பரவி,
தோய் அடைந்த தண்வயல் சூழ் தோணி புரத் தலைவன்-
சாய் அடைந்த ஞானம் மல்கு சம்பந்தன்-இன் உரைகள்
வாய் அடைந்து பாட வல்லார் வான் உலகு ஆள்பவரே.
உரை