தொடக்கம் | ||
55. திருமாற்பேறு - பழந்தக்கராகம்
|
||
591. |
ஊறி ஆர்தரு நஞ்சினை உண்டு, உமை நீறு சேர் திருமேனியர் சேறு சேர் வயல் தென் திருமாற் பேற்றில் மாறு இலா மணிகண்டரே. |
உரை |
592. |
தொடை ஆர் மா மலர் கொண்டு, இருபோது, உம்மை அடைவார் ஆம், “அடிகள்!” என மடை ஆர் நீர் மல்கு மன்னிய மாற்பேறு உடையீரே! உமை உள்கியே. |
உரை |
593. |
“பை ஆரும் அரவம் கொடு ஆட்டிய கையான்” என்று வணங்குவர் மை ஆர் நஞ்சு உண்டு மாற்பேற்று இருக்கின்ற ஐயா! நின் அடியார்களே. |
உரை |
594. |
சால மா மலர் கொண்டு, “சரண்!” என்று, மேலையார்கள் விரும்புவர் மாலினார் வழிபாடு செய் மாற்பேற்று நீலம் ஆர் கண்ட! நின்னையே. |
உரை |
595. |
“மாறு இலா மணியே!” என்று வானவர் ஏறவே மிக ஏத்துவர் கூறனே! குலவும் திரு மாற்பேற்றில் நீறனே! என்றும் நின்னையே. |
உரை |
596. |
உரையாதார் இல்லை, ஒன்றும் நின் தன்மையை; பரவாதார் இல்லை, நாள்களும்; திரை ஆர் பாலியின் தென் கரை மாற்பேற்று அரையானே! அருள் நல்கிடே! |
உரை |
597. |
அரசு அளிக்கும் அரக்கன் அவன்தனை உரை கெடுத்து, அவன் ஒல்கிட வரம் மிகுத்த எம் மாற்பேற்று அடிகளைப் பரவிடக் கெடும், பாவமே. |
உரை |
598. |
இருவர்தேவரும் தேடித் திரிந்து, இனி ஒருவரால் அறிவு ஒண்ணிலன், மருவு நீள்கழல் மாற்பேற்று அடிகளைப் பரவுவார் வினை பாறுமே. |
உரை |
599. |
தூசு போர்த்து உழல்வார், கையில் துற்று உணும் நீசர்தம் உரை கொள்ளேலும்! “தேசம் மல்கிய தென்திருமாற்பேற்றின் ஈசன்” என்று எடுத்து ஏத்துமே! |
உரை |
600. |
மன்னி மாலொடு சோமன் பணி செயும் மன்னும் மாற்பேற்று அடிகளை மன்னு காழியுள் ஞானசம்பந்தன் சொல் பன்னவே, வினை பாறுமே. |
உரை |