தொடக்கம் | ||
56. திருப்பாற்றுறை - பழந்தக்கராகம்
|
||
601. |
கார் ஆர் கொன்றை கலந்த முடியினர், சீர் ஆர் சிந்தை செலச் செய்தார் பாரார் நாளும் பரவிய பாற்றுறை யார், ஆர் ஆதி முதல்வரே. |
உரை |
602. |
நல்லாரும் அவர்; தீயர் எனப்படும் சொல்லார்; நல்மலர் சூடினார்; பல் ஆர் வெண் தலைச் செல்வர் எம் பாற்றுறை எல்லாரும் தொழும் ஈசரே. |
உரை |
603. |
விண் ஆர் திங்கள் விளங்கும் நுதலினர், எண்ணார் வந்து, என் எழில் கொண்டார் பண் ஆர் வண்டு இனம் பாடல் செய் பாற்றுறை யுள் நாள்நாளும் உறைவரே. |
உரை |
604. |
பூவும் திங்கள் புனைந்த முடியினர், ஏவின் அல்லார் எயில் எய்தார் பாவம் தீர் புனல் மல்கிய பாற்றுறை, ஓ! என் சிந்தை ஒருவரே. |
உரை |
605. |
மாகம் தோய் மதி சூடி, மகிழ்ந்து, எனது ஆகம் பொன்நிறம் ஆக்கினார் பாகம் பெண்ணும் உடையவர், பாற்றுறை நாகம் பூண்ட நயவரே. |
உரை |
606. |
போது பொன் திகழ் கொன்றை புனை முடி நாதர் வந்து, என் நலம் கொண்டார் பாதம் தொண்டர் பரவிய பாற்றுறை வேதம் ஓதும் விகிர்தரே. |
உரை |
607. |
வாடல் வெண்தலை சூடினர், மால்விடை கோடல் செய்த குறிப்பினார் பாடல் வண்டு இனம் பண் செயும் பாற்றுறை ஆடல் நாகம் அசைத்தாரே. |
உரை |
608. |
வெவ்வ மேனியராய், வெள்ளை நீற்றினர்; எவ்வம் செய்து, என் எழில் கொண்டார்; பவ்வநஞ்சு அடை கண்டர் எம் பாற்றுறை மவ்வல் சூடிய மைந்தரே. |
உரை |
609. |
ஏனம் அன்னமும் ஆனவருக்கு எரி ஆன வண்ணத்து எம் அண்ணலார் பானல் அம்மலர் விம்மிய பாற்றுறை வான வெண்பிறை மைந்தரே. |
உரை |
610. |
வெந்த நீற்றினர், வேலினர், நூலினர், வந்து என் நன் நலம் வௌவினார் பைந் தண் மாதவி சூழ்தரு பாற்றுறை மைந்தர்தாம் ஓர் மணாளரே. |
உரை |
611. |
பத்தர் மன்னிய பாற்றுறை மேவிய பத்து-நூறு பெயரனை, பத்தன் ஞானசம்பந்தனது இன் தமிழ் பத்தும் பாடிப் பரவுமே! |
உரை |