58. திருக்கரவீரம் - பழந்தக்கராகம்
 
623. அரியும், நம் வினை உள்ளன ஆசு அற
வரி கொள் மாமணி போல் கண்டம்
கரியவன், திகழும் கரவீரத்து எம்
பெரியவன், கழல் பேணவே.
உரை
   
624. தங்குமோ, வினை தாழ்சடை மேலவன்,
திங்களோடு உடன்சூடிய
கங்கையான், திகழும் கரவீரத்து எம்
சங்கரன், கழல் சாரவே?
உரை
   
625. ஏதம் வந்து அடையா, இனி நல்லன
பூதம் பல்படை ஆக்கிய
காதலான், திகழும் கரவீரத்து எம்
நாதன், பாதம் நணுகவே.
உரை
   
626. பறையும் நம் வினை உள்ளன பாழ்பட
மறையும் மாமணி போல் கண்டம்
கறையவன், திகழும் கரவீரத்து எம்
இறையவன், கழல் ஏத்தவே.
உரை
   
627. பண்ணின் ஆர் மறை பாடலன், ஆடலன்,
விண்ணின் ஆர் மதில் எய்த முக்
கண்ணினான், உறையும் கரவீரத்தை
நண்ணுவார் வினை நாசமே.
உரை
   
628. நிழலின் ஆர் மதி சூடிய நீள் சடை
அழலினார், அனல் ஏந்திய
கழலினார், உறையும் கரவீரத்தைத்
தொழ வல்லார்க்கு இல்லை, துக்கமே.
உரை
   
629. வண்டர் மும்மதில் மாய்தர எய்தவன்,
அண்டன், ஆர் அழல் போல் ஒளிர்
கண்டனார் உறையும் கரவீரத்துத்
தொண்டர்மேல் துயர் தூரமே.
உரை
   
630. “புனல் இலங்கையர் கோன் முடிபத்து இறச்
சின வல் ஆண்மை செகுத்தவன்,
கனலவன், உறைகின்ற கரவீரம்”
என வல்லார்க்கு இடர் இல்லையே.
உரை
   
631. வெள்ளத் தாமரையானொடு மாலும் ஆய்த்
தெள்ள, தீத்திரள் ஆகிய
கள்ளத்தான் உறையும் கரவீரத்தை
உள்ளத் தான் வினை ஓயுமே.
உரை
   
632. செடி அமணொடு சீவரத்தார் அவர்
கொடிய வெவ் உரை கொள்ளேன் மின்!
கடியவன் உறைகின்ற கரவீரத்து
அடியவர்க்கு இல்லை, அல்லலே.
உரை
   
633. வீடு இலான், விளங்கும் கரவீரத்து எம்
சேடன் மேல் கசிவால்-தமிழ்
நாடும் ஞானசம்பந்தன் சொல் இவை
பாடுவார்க்கு இல்லை, பாவமே.
உரை