60. திருத்தோணிபுரம் - பழந்தக்கராகம்
 
645. வண் தரங்கப் புனல் கமல மது மாந்திப் பெடையினொடும்
ஒண் தரங்க இசை பாடும் அளி அரசே! ஒளி மதியத்
துண்டர், அங்கப்பூண் மார்பர், திருத் தோணிபுரத்து உறையும்
பண்டரங்கர்க்கு என் நிலைமை பரிந்து ஒரு கால் பகராயே!
உரை
   
646. எறி சுறவம் கழிக் கானல் இளங் குருகே! என் பயலை
அறிவு உறாது ஒழிவதுவும் அருவினையேன் பயன் அன்றே!
செறி சிறார் பதம் ஓதும் திருத் தோணிபுரத்து உறையும்
வெறி நிற ஆர் மலர்க்கண்ணி வேதியர்க்கு விளம்பாயே!
உரை
   
647. பண் பழனக் கோட்டு அகத்து வாட்டம் இலாச் செஞ்சூட்டுக்
கண்பு அகத்தின் வாரணமே! கடுவினையேன் உறு பயலை,
செண்பகம் சேர் பொழில் புடை சூழ் திருத் தோணிபுரத்து உறையும்
பண்பனுக்கு என் பரிசு உரைத்தால் பழி ஆமோ? மொழியாயே!
உரை
   
648. காண் தகைய செங்கால் ஒண் கழி நாராய்! “காதலால்
பூண் தகைய முலை மெலிந்து பொன் பயந்தாள்” என்று, வளர்
சேண் தகைய மணி மாடத் திருத் தோணிபுரத்து உறையும்
ஆண்தகையாற்கு இன்றே சென்று அடி அறிய உணர்த்தாயே!
உரை
   
649. பாராரே, எனை ஒரு கால்; தொழுகின்றேன், பாங்கு அமைந்த
கார் ஆரும் செழு நிறத்துப் பவளக்கால் கபோதகங்காள்!
தேர் ஆரும் நெடுவீதித் திருத் தோணிபுரத்து உறையும்
நீர் ஆரும் சடையாருக்கு என் நிலைமை நிகழ்த்தீரே!
உரை
   
650. சேற்று எழுந்த மலர்க்கமலச் செஞ்சாலிக் கதிர் வீச,
வீற்றிருந்த அன்னங்காள்! விண்ணோடு மண் மறைகள்
தோற்றுவித்த திருத் தோணிபுரத்து ஈசன், துளங்காத
கூற்று உதைத்த, திருவடியே கூடுமா கூறீரே!
உரை
   
651. முன்றில்வாய் மடல் பெண்ணைக் குரம்பை வாழ், முயங்கு சிறை,
அன்றில்காள்! பிரிவு உறும் நோய் அறியாதீர்; மிக வல்லீர்;
தென்றலார் புகுந்து உலவும் திருத் தோணிபுரத்து உறையும்
கொன்றை வார்சடையார்க்கு என் கூர் பயலை கூறீரே!
உரை
   
652. பால் நாறும் மலர்ச் சூதப் பல்லவங்கள் அவை கோதி,
ஏனோர்க்கும் இனிது ஆக மொழியும் எழில் இளங்குயிலே!
தேன் ஆரும் பொழில் புடை சூழ் திருத் தோணிபுரத்து அமரர்
கோனாரை என்னிடைக்கே வர ஒரு கால் கூவாயே!
உரை
   
653. நல் பதங்கள் மிக அறிவாய்; நான் உன்னை வேண்டுகின்றேன்;
பொற்பு அமைந்த வாய் அலகின் பூவைநல்லாய்! போற்றுகின்றேன்;
சொல்பதம் சேர் மறையாளர் திருத் தோணிபுரத்து உறையும்
வில் பொலி தோள் விகிர்தனுக்கு என் மெய்ப் பயலை விளம்பாயே!
உரை
   
654. சிறை ஆரும் மடக்கிளியே! இங்கே வா! தேனோடு பால்
முறையாலே உணத் தருவன்; மொய் பவளத்தொடு தரளம்
துறை ஆரும் கடல் தோணி புரத்து ஈசன், துளங்கும் இளம்
பிறையாளன், திரு நாமம் எனக்கு ஒரு கால் பேசாயே!
உரை
   
655. போர் மிகுத்த வயல்-தோணிபுரத்து உறையும் புரிசடை எம்
கார் மிகுத்த கறைக் கண்டத்து இறையவனை, வண்கமலத்
தார் மிகுத்த வரைமார்பன்-சம்பந்தன்-உரைசெய்த
சீர் மிகுத்த தமிழ் வல்லார் சிவலோகம் சேர்வாரே.
உரை