61. திருச்செங்காட்டங்குடி - பழந்தக்கராகம்
 
656. நறை கொண்ட மலர் தூவி, விரை அளிப்ப, நாள் தோறும்
முறை கொண்டு நின்று, அடியார் முட்டாமே பணி செய்ய,
சிறை கொண்ட வண்டு அறையும் செங்காட்டங்குடி அதனுள்,
கறை கொண்ட கண்டத்தான்-கணபதீச்சுரத்தானே.
உரை
   
657. வார் ஏற்ற பறை ஒலியும் சங்கு ஒலியும் வந்து இயம்ப,
ஊர் ஏற்ற செல்வத்தோடு ஓங்கிய சீர் விழவு ஓவாச்
சீர் ஏற்றம் உடைத்து ஆய செங்காட்டங்குடி அதனுள்,
கார் ஏற்ற கொன்றையான்-கணபதீச்சுரத்தானே.
உரை
   
658. வரந்தையான், சோபுரத்தான், மந்திரத்தான், தந்திரத்தான்,
கிரந்தையான், கோவணத்தான், கிண்கிணியான், கையது ஓர்
சிரந்தையான், செங்காட்டங்குடியான், செஞ்சடைச் சேரும்
கரந்தையான், வெண் நீற்றான்-கணபதீச்சுரத்தானே.
உரை
   
659. தொங்கலும் கமழ்சாந்தும் அகில் புகையும் தொண்டர் கொண்டு,
அங்கையால் தொழுது ஏத்த, அருச்சுனற்கு அன்று அருள்செய்தான்;
செங்கயல் பாய் வயல் உடுத்த செங்காட்டங்குடி அதனுள்,
கங்கை சேர் வார்சடையான்-கணபதீச்சுரத்தானே.
உரை
   
660. பாலினால் நறு நெய்யால் பழத்தினால் பயின்று ஆட்டி,
நூலினால் மணமாலை கொணர்ந்து, அடியார் புரிந்து ஏத்த,
சேலின் ஆர் வயல் புடை சூழ் செங்காட்டங்குடி அதனுள்,
காலினால் கூற்று உதைத்தான்-கணபதீச்சுரத்தானே.
உரை
   
661. நுண்ணியான், மிகப் பெரியான், நோய் உளார் வாய் உளான்,
தண்ணியான், வெய்யான், நம் தலைமேலான், மனத்து உளான்,
திண்ணியான், செங்காட்டங்குடியான், செஞ்சடை மதியக்
கண்ணியான், கண் நுதலான்-கணபதீச்சுரத்தானே.
உரை
   
662. மையின் ஆர் மலர் நெடுங்கண் மலைமகள் ஓர் பாகம் ஆம்
மெய்யினான், பை அரவம் அரைக்கு அசைத்தான், மீன் பிறழ் அச்
செய்யின் ஆர் அகன் கழனிச் செங்காட்டங்குடி அதனுள்
கையின் ஆர் கூர் எரியான்-கணபதீச்சுரத்தானே.
உரை
   
663. தோடு உடையான், குழை உடையான், அரக்கன்தன் தோள் அடர்த்த
பீடு உடையான், போர் விடையான், பெண் பாகம் மிகப் பெரியான்,
சேடு உடையான், செங்காட்டங்குடி உடையான், சேர்ந்து ஆடும்
காடு உடையான், நாடு உடையான்-கணபதீச்சுரத்தானே.
உரை
   
664. ஆன் ஊரா உழி தருவான், அன்று இருவர் தேர்ந்து உணரா
வான் ஊரான், வையகத்தான், வாழ்த்துவார் மனத்து உளான்,
தேனூரான், செங்காட்டங்குடியான், சிற்றம்பலத்தான்,
கானூரான், கழுமலத்தான்-கணபதீச்சுரத்தானே.
உரை
   
665. செடி நுகரும் சமணர்களும், சீவரத்த சாக்கியரும்
படி நுகராது அயர் உழப்பார்க்கு அருளாத பண்பினான்;
பொடி நுகரும் சிறுத் தொண்டர்க்கு அருள் செய்யும் பொருட்டாகக்
கடி நகர் ஆய் வீற்றிருந்தான்-கணபதீச்சுரத்தானே.
உரை
   
666. கறை இலங்கு மலர்க்குவளை கண் காட்டக் கடிபொழிலின்
நறை இலங்கு வயல் காழித் தமிழ் ஞானசம்பந்தன்,
சிறை இலங்கு புனல் படப்பைச் செங்காட்டங்குடி சேர்த்தும்
மறை இலங்கு தமிழ் வல்லார் வான் உலகத்து இருப்பாரே.
உரை